தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் –

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் –

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் துவக்கத்தில் கடந்த வருடங்களில் நம்மை விட்டு மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் டெல்லி கணேஷ், ராஜேஷ், எம். ஏ. பிரகாஷ், மனோஜ் கே.பாரதி மற்றும் சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கர் உட்பட 70மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும், சிவகுமார், வடிவேலு, ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீமன், பசுபதி, நடிகைகள் எம்.என்.ராஜம், சச்சு, லதா அம்பிகா, ஊர்வசி, ரேகா, ஷர்மிளா, ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக மூத்த கலைஞரான எம்.என். ராஜம் இந்த தள்ளாத வயதிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் மூத்த கலைஞர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் அவர்களை கௌரவிக்கும் விதமாக வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் புதிய தீர்மானங்களும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி கோரும் விதமாக அறிவிக்கப்பட்டன.

பொருளாளர் நடிகர் கார்த்தி பேசும்போது,

சதியம் சினிமாஸ், பிவிஆர் என்கிற மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் கைவசம் போன பிறகு அவர்களிடம் இருந்த நடிகர் சங்க நிலத்தை போராடி மீட்டோம். ரஜினி சார், கமல் சா ர்போன்ற ஜாம்பவான் கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நடத்திய கலை நிகழ்ச்சிகள் மூலமாக, எல்லோரும் ஒன்று சேர்ந்து உழைத்ததன் மூலமாக இந்த கட்டடம் கட்ட ஆரம்பித்தது. 2017ல் நடிகர் சங்க கட்டடத்தை கட்ட துவங்க ஆரம்பித்தோம். 2019 நடிகர்சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்பட்ட குளறுபடி, அதன்பிறகு வந்த கொரோனா காலகட்டம் இவற்றால் கட்டட பணிகள் மூன்று வருடங்கள் தள்ளிப் போனது. மீண்டும் நடிகர் சங்க தேர்தலில் ஜெயித்து உள்ளே வந்தோம். வங்கி கடன் பெற்று இந்த கட்டிட பணிகளை துவங்குவதற்காக இரண்டு வருடம் போராடினோம். 40 கோடி ரூபாய் வரை லோன் வாங்கும் முயற்சி செய்து வங்கியை அணுகினோம். ஆனால் ஆரம்பத்தில் 25 கோடி ரூபாய் தான் கிடைத்தது. ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பித்ததால் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டிய சவாலை சந்தித்தோம். இந்த ஐந்து வருட காலத்தில் தொழில்நுட்பமே மாறி இருந்தது. அந்த சமயத்தில் தான் நடிகர் ராஜா சார் எங்களுடன் வந்து பக்க பலமாக கூடவே நின்று கட்டிட வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக நின்றார். கட்டடம் எவ்வாறு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எல்லோரும் வந்து பாருங்கள் என்று பலரிடமும் நான் அழைப்பு விடுத்து வருகிறேன்” என்று பேசினார்.

பொதுச்செயலாளர் விஷால் பேசும்போது,

பத்து வருடங்களுக்கு முன்பு இதே போல முன்னாள் தலைமை பொறுப்பில் இருந்தவர்கள் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் உங்கள் பக்கம் அமர்ந்திருந்தேன். அந்த சமயத்தில் நீங்கள் பக்கபலமாக இருக்கும் தைரியத்தில் தான் அப்போது துணிச்சலாக மேடையேறி என் மனதில் இருந்ததை பெசினேன். என்னை நடிகர் சங்க உறுப்பினர் ஆக்கியது நடிகர் ராதாரவி அண்ணன் தான். ஆனால் ஒரு காலத்தில் அவரை எதிர்த்தே போட்டியிட்டு அவரை ஜெயிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதன் பிறகு தான் அண்ணன் பூச்சி முருகன் இந்த நடிகர் சங்க கட்டடம் குறித்த வரலாறு பற்றிய டாக்குமென்ட்களை என்னிடம் கொண்டு வந்தார், கருணாஸும் என்ன செய்யலாம் என தேடிவந்தார். கிட்டத்தட்ட 18 வருடங்களாக சங்கத்தில் வளர்ச்சிக்காக போராடும் நாசர் சாரும் அப்படியே எனது நண்பன் கார்த்தி என அனைவரும் ஒன்று சேர்ந்தோம்.

நாடக நடிகர்களை சந்தித்து பேசுவதற்காக மதுரைக்கு கிளம்பிய எங்கள் ஐந்து பேர் குழுவுக்கும் நடிகர் சிவகுமார் சார் தான் பாண்டவர் அணி என பெயர் வைத்தார். அப்படித்தான் இந்த பெயர் வந்தது. இந்த 69 ஆவது பொதுக்குழுவில் இங்கே நிற்பது பெருமையாக இருக்கிறது. சினிமாக்காரனுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள், வீடு கிடைக்காது. ஆனால் எனக்கு நம்முடைய சங்கத்தில் இருக்கும் உறுப்பினர் ஒருவரே (தன்ஷிகா) வாழ்க்கை துணையாக அமைய இருக்கிறார். நடிகர் சங்க கட்டடம் திறந்ததும் அதில் முதல் முகூர்த்தத்தில் நடைபெறும் முதல் திருமணம் என்னுடையது தான் என்று இப்போதே நான் புக் பண்ணி விட்டேன். நீங்கள் அனைவரும் அங்கே வந்து என்னை வாழ்த்த வேண்டும்.

நடிகர் சங்கத்தில் பல விஷயங்களில் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. நம்பிராஜன் அண்ணன் வழக்கு தொடர்ந்து இருக்கிறார். இதன் பின்னணியில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த விஷயம் தற்போது நீதிமன்றத்தின் கைகளில் இருப்பதால் நாங்கள் எதுவும் தீர்மானம் போட முடியாது. ஆனால் இது போன்ற வழக்குகளால் வழக்கு செலவுகள் ரொம்பவே அதிகமாகி விட்டன. இதனால் இதற்கு முன்பு உறுப்பினர்களுக்கு கொடுத்து வந்த பென்ஷன், மருத்துவ கல்வி, கல்வி உதவி எல்லாம் தடைப்பட்டு இருக்கின்றன. வழக்கு போட வேண்டும் என்றால் தனியாக செயலாளர், பொருளாளர் மீது வழக்கு போடுங்கள். நாங்கள் அதை எதிர்கொள்கிறோம். இப்படி நடிகர் சங்கத்தின் மீது வழக்கு கொடுக்க வேண்டாம்.

இல்லையென்றால் நீங்கள் அப்படியே வழக்கு போட்டுக் கொண்டே இருங்கள். நீதியை விலக்கி வாங்கலாம் என நினைத்தாலும் இந்த கட்டடம் குறுகிய காலத்திற்குள் சீக்கிரமே வளரும். அதை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். நீங்கள் எடுத்து வைத்த செங்கல்லும் அதில் இருக்கிறது. உங்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் உழைக்கிறோம். கட்டடம் மிகப்பிரமாண்டமாக வந்து கொண்டிருக்கிறது. நானும் கார்த்தியும் ஒரு நாளைக்கு பத்து முறையாவது கட்டடத்தின் வேலைகள், அதன் அமைப்பு. உருவாக்கம். சின்ன நட்டு.. போல்டு முதற்கொண்டு டீட்டைலாக பேசுவோம். வெளியிட நிகழ்ச்சிகளுக்கு போனால் அங்கு இருக்கும் அரங்க அமைப்புகளை தான் எங்களது கண்கள் முதலில் பார்க்கும். இதைவிட நமது கட்டடம் என்னும் சிறப்பாக வர வேண்டுமே என்று. கார்த்தியின் உழைப்பு சாதாரணமானது இல்லை. நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும். நான் வியந்து பார்த்த அத்தனை பேருடனும் நடித்தது, அவர்களுடன் இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமை, அடுத்து தேர்தலை சந்திப்போம், எங்களுக்கு பயமில்லை, தேர்தல் நடக்கும், கட்டட திறப்பு விழாவும் நடக்கும், மேலே இருக்கும் சாமியும், கீழே இருக்கும் பூமியும், நடுவில் இருக்கும் நீங்களும் எங்களுக்கு துணையாக இருப்பீர்கள்” என்று பேசினார்.

துணைத்தலைவர் பூச்சி முருகன் பேசும்போது,

நடிகர் சங்க கட்டட பணிகளில் கார்த்தி, விஷால் இருவரும் சிமெண்ட் மட்டும்தான் தூக்கிக் கொடுக்கவில்லை. மற்ற அனைத்து பணிகளையும் இழுத்து போட்டு பார்க்கிறார்கள். சங்கத் தலைவரான நாசர் படப்பிடிப்புகளில் இருந்தாலும் கூட இரவு நேரங்களில் ரவுண்ட்ஸ் வந்து வேலைகளை முடுக்கி விடுகிறார். கருணாஸ் நேரில் வராவிட்டாலும் வாட்ஸ்அப் மூலமாகவே எங்களை கண்காணித்து சில ஆலோசனைகளை கூறி வருகிறார். சக்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த நம்பிராஜ் பொதுக்குழுவுக்கே வராமல் வழக்கு போட்டுள்ளார். ஆனாலும் நீதிமன்றத்தின் மூலமாக அவருக்கும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம். அவர் வரவில்லை. இந்த கட்டடம் கட்டுவதற்கு பத்து வருடங்கள் ஆனாலும் கூட 100 ஆண்டுகள் இது நிலைத்து நிற்கும்.

இடையில் சில காரணங்களால் சங்க உறுப்பினர்களுக்கு பென்ஷன் கொடுக்க முடியாமல் போனது. அந்த சிக்கல் ஏற்படாமல் இருந்தால் 600 பேருக்கு கொடுத்ததை 800 பேருக்கு என இன்னும் அதிக அளவிலான பென்ஷன் தொகையை கொடுத்திருப்போம்.. ஆனால் இந்த சிக்கலுக்கு காரணமான நம்பிராஜின் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்க மாட்டோம். நீதிமன்றத்தின் உத்தரவை மட்டுமே நாங்கள் நிறைவேற்ற போகிறோம்.. அவரை பின்னால் இருந்து இயக்குவது யார் என்று எங்களுக்கு தெரியும்” என்று கூறியவர் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்களுக்கு அனுமதி கேட்டு அவற்றை வாசித்தார்.

தலைவர் நாசர் பேசும்போது,

“இந்த பொறுப்பை எடுத்துக்கொண்டு பத்து வருடம் ஆகிவிட்டது என கார்த்தி ஞாபகப்படுத்தினார். ஆனால் இடையில் எவ்வளவோ நிகழ்வுகளை சந்தித்தாலும் அவை எல்லாமே எங்களது பந்தத்தை உறுதிப்படுத்தின. சோதனைகளை ஒன்றாக எதிர்கொண்டோம். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அப்படி போர்க்கருவியாக கருணாஸ் ஓங்கி குரல் கொடுத்தார். பூச்சி முருகன் சட்டரீதியாக குரல் கொடுக்கும் தெளிவையும் தைரியத்தையும் கொடுத்தார். பத்து வருடத்திற்கு முன்பு நடந்த பொதுக்குழுவில் நானும் விஷாலும் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தோம். அப்போதுதான் முதல் முறையாக விஷால் மேடை ஏறி குரல் கொடுத்தார். அப்போது இருந்துதான் நாங்கள் இணைந்தோம். சீர்குலைந்த நடைமுறையை இந்த பத்து வருடத்தில் சீர்திருத்தி உள்ளோம்.

சங்கத்தை சேர்ந்தவர்களே நம் மீது வழக்கு போட்டாலும் சங்கத்திற்கு சம்பந்தமே இல்லாத நடிகர் ராஜா அவர்கள் தானாகவே முன்வந்து இந்த கட்டட வளர்ச்சிக்கு பக்கபலமாக உறுதுணையாக நிற்கிறார். இந்த கட்டடம் புதியதொரு சரித்திரத்தை தொடங்கும். உங்கள் வாழ்விலே மலர்ச்சியை சேர்க்கும். இருளை விலக்கி ஒளியை சேர்க்கும்” என்று கூறியவர், “150 கோடி பேர் வாழ்கின்ற இந்த நாட்டில் மிகச்சிறந்த ஒரு கலைஞனுக்காக மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது எனது நண்பரும் நடிகருமான மோகன்லாலுக்கு கிடைத்துள்ளது. அதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம் மிகப் பெருமை கொள்கிறது” என்று பேசினார்.

நடிகர் வடிவேலு பேசும்போது,

மூத்த கலைஞர்களான எம்.என் ராஜம், சச்சு, லதா, இந்த சினிமாவில் எனக்கு ஒரு தாய் தந்தையைப் போல இருந்து தக்க சமயங்களில் அறிவுரை ஆலோசனை சொல்லி வழி நடத்திய அண்ணன் சிவக்குமார் இவர்களுக்கு முன்னால் இங்கே நிற்பது பெருமையாக இருக்கிறது. சச்சும்மா என்ன பண்ற வடிவேலு என அடிக்கடி விசாரிப்பார். சிவகுமார் அண்ணன் என்னுடைய படம் பார்த்துவிட்டு சிறப்பாக நடித்திருக்கிறாய்.. நேரில் வந்து இரண்டு முத்தம் வாங்கிட்டு போடா என்ற வாஞ்சையுடன் கூறுவார்.

ஆனாலும் நாம் ஒரு விஷயத்தில் கொஞ்சம் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறோம். இதை இந்த நேரத்தில் நான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என பார்க்காமல் யூடியூபில் சில பேர் நம் கலைஞர்களைப் பற்றி அசிங்க அசிங்கமாக, அநாகரிகமாக, தப்பு தப்பாக தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகர் சங்கம் என்பது நடிகர்களை பாதுகாப்பதற்கு தான். அதற்காக நடிகர் சங்கம் செயல்படாமல் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. கலைஞர்களுக்குள் லேசாக சின்ன விரிசல் விழுந்தால் கூட அதை ஊதி கிணறு வெட்டுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தற்போது அப்படித்தான் அநாகரிகமாக பேசிய இரண்டு மூன்று பேர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பல முறை நான் பூச்சி முருகன் அண்ணனிடம் பேசி இருக்கிறேன்.

இன்னும் நாலைந்து பேர் அப்படி திரிகிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஆப்பு வைத்தால்தான் இந்தத் திரையுலகம் விளங்கும். அதே சமயம் நடிகர்களிலேயே சிலர் இது போன்ற ஆட்களை பணம் கொடுத்து தங்களுக்கு பிடிக்கதவர்களுக்கு எதிராக பேச வைக்கிறார்கள். தன்னுடைய படம் ஓட வேண்டும் என்பதற்காக மற்றவர்களுக்கு எதிராக ஆட்களுக்கு பணம் கொடுத்து திட்ட வைக்கிறார்கள் என்பது தான் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம். தயாரிப்பாளர் சங்கத்திலும் இதே போன்ற வேலை நடக்கத்தான் செய்கிறது.

இதற்கு உடந்தையாக நம் சங்கத்தில் இருப்பவர்கள் சில நடிகர்களே உடந்தையாக இருக்கிறார்கள். இதுவே கேரளாவாக இருந்திருந்தால் இப்படி பேசுபவர்களை பிதுக்கி எடுத்து மசாலா தடவி இருப்பார்கள். ஆனால் இங்கே யாரும் அப்படி செய்வதில்லை. இப்போதைய தலைவர் நாசர் உள்ளிட்ட இந்த நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள் போர்க்கால நடவடிக்கையாக இது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உண்டு இல்லை என பண்ண வேண்டும். அப்படி செய்தால் தான் நடிகர் சங்கம் என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியும்.

அந்த நபர்களை தூங்கவிடாமல் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் நாம் நிம்மதியாக தூங்க முடியும். எல்லா கலைஞர்களும் சேர்ந்து மக்களை மகிழ்விக்கும் பணியை செய்து வருகிறோம். இப்போது தியேட்டர்களுக்கு உள்ளே சென்று படம் பார்த்து விட்டு வருபவர்களிடம் படம் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை கேட்டு வாங்குகிறார்கள். சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அவர்களுக்கு பணம் தராமல் போனால், இப்படி சினிமாவை கிட்டத்தட்ட ஒரு பத்து பேர் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இவர்களை என்ன செய்கிறதோ இல்லையோ இவர்களுக்கு நடிகர் சங்கம் ஒரு முடிவு கட்ட வேண்டும். இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்” என்று பேசினார்.

நடிகர் சிவகுமார் பேசும்போது, “

மறைந்த கே சுப்பிரமணியம் நடிகர் சங்கம் துவங்குவதற்கு 1952ல பிள்ளையார் சுழி போட்டார். அந்த நடிகர் சங்கத்தில் முதல் பெண் உறுப்பினர் நடிகை எம்.என் ராஜம் தான். என்னுடைய 17 வயதிலேயே அவர்களை நான் பார்த்திருக்கிறேன். அதன்பிறகு பல வருடங்கள் கழித்து கண்மணி ராஜா என்கிற படத்தில் அவருக்கே மகனாக நடித்தேன். அதை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. தெலுங்கில் இருந்து பானுமதி, சாவித்திரி, மலையாளத்தில் இருந்து பத்மினி, கே.ஆர் விஜயா ஆகியோர் கோலாச்சிய சமயத்தில் நம் தமிழ் பெண்ணான எம்.என்.ராஜம் அவர்களுக்கு இணையாக பெரும் புகழ் பெற்றிருந்தார்.

எதார்த்தம் பொன்னுசாமி என்பவர் நடத்திய பாய்ஸ் கம்பெனி நாடகக் குழுவில் ஆண்களே பெண் வேடம் போட்டு நடிக்க வேண்டிய நிலையில் 7 வயதிலேயே முதல் பெண் கலைஞராக உள்ளே நுழைந்தவர் தான் எம்.என் ராஜம். 14 வயதிலேயே எம்.ஆர் ராதாவின் ரத்தக்கண்ணீர் படத்தில் தைரியமாக நடித்தவர். தமிழ் சினிமாவின் முதல் கலர் படமான அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் இவர் ஒரு காமெடி கலந்த பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த மகத்தான பெண்மணி அவர். இந்த நடிகர் சங்கத்தின் மூலம் இவருக்கு இந்த வருடம் விருது வழங்குவதில் எனக்கு மிகவும் பெருமை” என்று கூறினார்.

நடிகை ஊர்வசி பேசும்போது,

“நான் தேசிய விருது வாங்கியதற்காக இங்கே என்னை அழைத்து கௌரவித்து விருது கொடுத்ததற்கு நன்றி. அதுவும் மலையாள படத்திற்கு எனக்கு கிடைத்த விருதுக்காக இங்கே தமிழ்நாட்டில் நம் நடிகர் சங்கத்தில் விருது வழங்கியது மிகவும் பெருமையாக இருக்கிறது. இதே போல தமிழ் நடிகர்கள் தேசிய விருது பெற்றால், நிச்சயமாக அவர்களை அழைத்து கௌரவிக்க வேண்டும் என மலையாள நடிகர் சங்கத்திடம் நான் வலியுறுத்துவேன்.

நடிகர் சங்க கட்டடம் துவங்கும் போது என்னை போன்ற பல பேர் இருந்து இருப்பார்கள். சில காரணங்களால் அவர்கள் தற்போது ஒதுங்கி இருக்கலாம். ஆனால் இப்போது நடிகர் சங்க கட்டடம் இவ்வளவு பிரம்மாண்டமாக நிற்பதை பார்ப்பது மிகப்பெரிய சந்தோஷம். நிறைய பேருக்கு மனஸ்தாபம் இருக்கிறது. அவர்கள் அதை எல்லாம் விட்டு விடுங்கள். எல்லோரும் மனதார வந்து வாழ்த்துங்கள். உங்கள் வாழ்த்துக்களுடன் இன்னும் பெரிதாக நடிகர் சங்கம் கட்டடம் கட்டி முடிக்கப்பட வேண்டும். இந்த தேசிய விருது எனக்கு கிடைத்திருப்பதில் மலையாள சினிமா, தமிழ் சினிமா என பிரித்து பார்க்காமல் நாம் அனைவரும் ஒன்றாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதற்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *