ஸ்மைல் மேன்
இயக்கம் – சியாம் பிரவீன்
நடிகர்கள் – சரத்குமார் , சிஜா ரோஸ், இனியா
இசை – கவாஸ்கர் அவினாஷ்
தயாரிப்பு – சலில் தாஸ் , அனீஷ் ஹரிதாசன் , ஆனந்தன்
சிபிசிஐடி அதிகாரி ஒருவர் ஸ்மைல் மேன் என்ற சைக்கோ கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் போது விபத்தில் சிக்கி உடல் நிலை பாதிக்கப்படுகிறார். சில மாதங்களுக்குப் பிறகு குணமடைந்தாலும் அல்சைமர் என்ற மறதிநோயால் பாதிக்கப்படுகிறார். அதே சமயம், தொடர் கொலைகள் செய்த சைக்கோ கொலையாளிக்கும் தனக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கும் சரத்குமார், அது என்ன? என்பதை தெரிந்து கொள்ள மீண்டும் சைக்கோ கொலையாளியை பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். தனது பழைய நினைவுகளை இழந்துக் கொண்டிருப்பதோடு, ஞாபக மறதியால் அவதிப்படும் சரத்குமார் சைக்கோ கொலையாளியை பிடிக்கும் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றாரா?, சைக்கோ கொலையாளிக்கும் சரத்குமாருக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பதே ‘ஸ்மைல் மேன்’ படத்தின் கதை.
சரத்குமார் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் படங்கள் வாரத்திற்கு ஒன்று வெளியானாலும், அனைத்திலும் ஏதோ ஒரு சிறு வித்தியாசத்தைக் காட்டி கவர்ந்துவிடுகிறார். அந்த வகையில், சிதம்பரம் நெடுமாறன் என்ற சிபிசிஐடி அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார், அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னால் முடிக்க முடியாமல் போன வழக்கை முடிக்க போராடும் ஒரு அதிகாரியாக அளவாக நடித்து படத்திற்கு பெரும் தூணாக பயணித்திருக்கிறார்.
சிபிசிஐடி குழுவைச் சேர்ந்தவர்களாக நடித்திருக்கும் சிஜா ரோஸ், ஸ்ரீகுமார் இருவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, திரைக்கதையின் திருப்பங்களுக்கு முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள். இனியா, சுரேஷ் மேனன், நட்ராஜன், ராஜ்குமார், மலைராஜன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களுக்கு முக்கிய பங்கு இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு தனது பங்கை கொடுத்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் விக்ரம் மோகன், இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஸ், ஆகியோரது பணி படத்தின் தரத்தை உயரத்தியிருக்கிறது.
தொடர் கொலைகள் செய்யும் சைக்கோ கொலையாளிகளின் பின்னணியில் சொல்லப்படும் கதை, கதையாசிரியர் தடுமாறியிருந்தாலும் இயக்குநர்கள் ஷ்யாம் – பிரவீன், சைக்கோ கொலையாளிக்கும், சரத்குமாருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி, எதிர்பார்க்காத திருப்பங்களுடன் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்ல முயற்சித்திருக்கிறார்கள். திரைக்கதையில் சில லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், தொழில்நுட்ப கலைஞர்களின் பணி, முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்களின் திரை இருப்பு மற்றும் மேக்கிங் ஆகியவை படத்திற்கு பெரும் பலம் சேர்த்துள்ளது.
மொத்தத்தில், இந்த ‘ஸ்மைல் மேன்’ நிச்சயம் பயமூட்டும்.
Rating 3/5