தலைமைச்செயலகம்
இயக்குனர் – வசந்த பாலன்
நடிகர்கள் – கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, Y.G. மகேந்திரன்
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு – ZEE5
தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெறும் நிலையில் உள்ளார். இவர் சிறை சென்ற பின் முதல்வர் பதவியைப் பிடிக்க அவரின் மகள் மருமகன் மற்றும் அட்வைஸர் ஆகியோர் போட்டி போடுகிறார்கள். ஒரு பக்கம் தன் தந்தையை தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார் . சிபிஐ அதிகாரிகள் ஒரு கொலை குற்றவாளி பெண்ணைத் தேடி ஜார்கண்ட், டெல்லி செல்கிறார்கள். இதே வழக்கை பரத் அவர்களும் தமிழ்நாட்டில் விசாரணை செய்கிறார். இரண்டு தளங்களில் பயணம் செய்யும் கதை ஒரு கட்டத்தில் இணைந்து பயணம் செய்கிறது. அவர் எதற்காக அந்த பழிக்கு ஆளாக்கப்பட்டார் அவரின் பதவி என்ன ஆனது என்பதே இந்தத் தொடரின் மீதிக்கதை
பெரும்பாலும் வில்லனாக நடிக்கும் கிஷோர் எப்படி ஒரு பக்குவமான முதல்வராக நடித்திருக்கிறார்? என வியந்து பாராட்டுகிறோம்! ஒரு மூத்த அரசியல்வாதியாகவும், ஒரு குடும்ப தலைவனாகவும் நுண்ணிய உணர்வுகளைக் காட்டி கிஷோர் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அவரின் பொருமை இந்தத் தொடருக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
கொற்றவை கேரக்டருக்கு ஸ்ரேயா ரெட்டியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார்களா? என்பது சந்தேகமே. ஆக்ரோஷமும், அன்பும் கலந்து ஒரு லைவ் கேரக்டரில் வாழ்ந்து காட்டிவிட்டார் ஸ்ரேயா.
இது வரை சந்தானபாரதியை வந்தார், நடித்தார் என்பது போன்ற ‘கெஸ்ட்’ ரோலில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தத் தொடரில் தன் முழு நடிப்புத் திறமையையும் காட்டி அசத்தியுள்ளார் என்று சொல்லலாம். ஒரு வயதான அரசியல்வாதியின் நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், Y G மகேந்திரன் என நடித்தவர்கள் அனைவருமே சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்
ஜிப்ரானின் இசை படத்தின் வேகத்தை அதிகரிக்கின்றது, பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை எனினும் பிண்ணனி இசை சிறப்பாக அமைந்துள்ளது.
வொய்ட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு, ரவிக்குமாரின் படத்தொகுப்பு இந்த மூன்றும் சேர்ந்து திரில்லர் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது.
கிஷோர் கதாபாத்திரத்தை கடந்த கால நம் அரசியல் தலைவர்களின் சாயலில் உருவாக்கியுள்ளார். ஒரு அரசியல் சமூகத்தின் பிண்ணனியில் என்னென்ன நடக்கும் அவர்களின் சொந்த வாழ்க்கை அவரது அரசியலுக்கும் மக்களுக்கும் எப்படி நன்மை செய்யும் தீமை செய்யும் என்பதை வித்தியாசமான முறையில் சொல்ல நினைக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
மொத்தத்தில் இந்த ‘தலைமைச்செயலகம்’ தொடர் ஒரு அரசியல் பாடம்!
Rating 3.2/5