ரயில் எப்படி இருக்கு?

ரயில்

இயக்குனர் – பாஸ்கர் சக்தி
நடிகர்கள் – குங்குமராஜ் , வைரமாலா , பர்வேஷ் மெஹ்ரு
இசை – SJ ஜனனி
தயாரிப்பு – வேதியப்பன்

எலக்ட்ரிக் வேலை செய்து வரும் ஒருவன் மது பழக்கத்திற்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்லாமல் எந்த நேரமும் மது குடிப்பதிலேயே நாட்டம் கொண்டிருக்கிறார். இதனால், அவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வருகிறது. திருமணம் ஆகி 7 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் அவரை மதிப்பதில்லை. இந்த விரக்தியில் இருக்கும் நாயகன் தன் கோபத்தை, தன் வீட்டின் எதிரே குடியிருக்கும் வட மாநில வாலிபர் ஒருவர் மீது காட்டுகிறார். ஆனால், அவரது மனைவி வட மாநில நபரை சொந்த தம்பியாக நினைத்து பழகுகிறார். தனது சொந்த ஊருக்கு போகும் சூழலில், அந்த வட மாநிலத்தவர் அந்த பெண்ணீடம் ஒரு பையை கொடுக்கிறார். அதை திரும்ப வாங்குவதற்குள் அவர் திடீரென்று மரணமடைய, அவரது இறுதி சடங்கிற்காக அந்த வட நாட்டவரின் மனைவி, குழந்தை, தந்தை ஆகியோர் தேனி வருகிறார்கள். இறுதிச் சடங்கு முடிந்த பிறகு அவர் வைத்திருந்த பணம் பற்றி அவரது குடும்பத்தார் கேட்கிறார்கள். அதை அந்த பெண் எடுக்க செல்லும் போது அந்த பை அங்கு இல்லாததால் அதிர்ச்சியடைகிறார். அந்த பை என்ன ஆனது?, அந்தக் குடும்பத்திற்காக அந்தப் பெண் என்ன செய்தார்? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், நாயகியாக நடித்திருக்கும் வைரமாலா இருவரும் அந்த கிராம மக்களாகவே வாழ்ந்துள்ளனர். முதல் படம் என்று நம்ப முடியாத அளவுக்கு இயல்பான நடிப்பு மூலம் தங்களது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பின்னர் பல வாய்ப்புகள் அவர்களை தேடி வரும். தனது இயலாமை மற்றும் விரக்தியை மற்ற நபர்கள் மீது வெறுப்பாக காட்டி குங்குமராஜ் நடிப்பில் ஸ்கோர் செய்தாலும், அவருக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கும் வைரமாலா, பையை தொலைத்துவிட்டு, குற்ற உணர்வில் பர்வேஸ் குடும்பத்தை பார்க்க மறுக்கும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

மேலும் வட இந்திய வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரூ, நாயகனின் நண்பராக நடித்திருக்கும் ரமேஷ் வைத்யா, நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் செந்தில் கோச்சடை, பர்வேஸின் தந்தையாக நடித்திருக்கும் பிண்ட்டூ உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள். ஒரு இயல்பான வாழ்க்கையில் இருப்பது போல நடித்திருப்பது படத்திற்கு மேலும் பலம்

இந்தப் படத்திற்கு எஸ்.ஜே.ஜனனியின் இசையமைத்துள்ளார். பாடல்களை விட பிண்ணனி இசை நம்மை படத்தோடு ஒன்ற வைத்துள்ளது, மேலும் ஒளிப்பதிவை ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் கையாண்டுள்ளார், அவரின் காட்சிகள் கதை நடக்கும் இடத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்கிறது.

இந்தியாவில் பல மாநிலத்தில் இருந்து பிழைப்புக்காக வேலை செய்பவர்களை ஏளனமாக பார்ப்பவர்கள் மற்றும் பேசுபவர்களுக்கு குட்டு வைக்கும் விதத்தில் கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, தமிழக இளைஞர்கள் பெரும்பாலனவர்கள் மதுவுக்கு அடிமையாகி, உழைப்பின் மீது நாட்டம் இல்லாமல் சோம்பேறிகளானதால் தான், வட மாநிலத்தவர்களுக்கு இங்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது, என்பதை அழுத்தமாக சொன்னதோடு “யாராலும் யாரோட வாய்ப்பையும் கெடுக்கவோ பறிக்கவோ முடியாது, நாம சுதாரிப்பா இருந்தா எங்கயும் பிழைக்கலாம்” என்ற விசயத்தை நெகிழ்ச்சியாக சொல்லியிருக்கிறார். எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிக இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் பாஸ்கர் சக்தி, பிழைப்பு தேடி வருவோர் மற்றும் வேறு ஊர்களுக்கு செல்வோர் பற்றிய ஒரு விசயத்தை மிக சாதாரணமாக சொல்லிவிட்டு போனாலும், அதன் மூலம் படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்துவிடுகிறார்.

மொத்தத்தில், இந்த ‘ரயில்’ ஒரு பகுத்தறிவான பயணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *