இயக்கம் – ரவிகுமார்
நடிகர்கள் – சிவகார்த்திகேயன், ராதிகா ஆப்தே
இசை – ஏ ஆர் ரஹ்மான்
இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமாருடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்த படம். கிட்டதட்ட 6 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்திருக்கிறது. இந்தப் படம் பூஜை போட்ட போதே, இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் இந்த திரைப்படம் பூர்த்தி செய்து இருக்கிறதா?
சயின்ஸ் பிக்சன் ஜானரில் தமிழ் படங்கள் செய்யாத ஒரு சாதனையை செய்த படம் ‘இன்று நேற்று நாளை’. அடிமட்ட ரசிகனுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதையில், அறிவியலை நுழைக்து, ஒரு டைம் ட்ராவல் படத்தை அனைவரையும் ரசிக்கும் வண்ணம் தந்த ரவிக்குமார், இந்த முறை முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஏலியன் படத்தை தந்துள்ளார்.
பூமியை துளையிட்டு அதில் உள்ள தனிமங்களை எடுத்து விற்க நினைக்கும் வில்லன். இதனால் பூமி அழியும் என உணர்ந்து, பூமியை காப்பாற்ற வரும் ஏலியன். அந்த ஏலியனை காப்பாற்றும் ஹீரோ. இது தான் கதை.
பொதுவாக இதுவரை வந்த ஏலியன் திரைப்படங்களில் ஏலியன் பூமியை அழிக்க வரும், ஹீரோ பூமியை ஏலியனிடமிருந்து காப்பாற்றுவார். ஆனால் இந்த படத்திலும் மனிதன் பூமியை அழிக்கிறான், அதை காப்பாற்றிய ஏலியன் வருகிறது, அதனுடன் கூட்டு சேர்ந்து ஹீரோ பூமியை காப்பாற்றுகிறார். இந்த புதுமையான ஐடியாவே அட்டகாசமான இருக்கிறது.
படத்தை முழுக்க முழுக்க குழந்தைகளுக்கும் புரியும் வண்ணம் எடுக்க வேண்டும் அவர்கள் ரசிக்க வேண்டும் என மனக்கட்டு இருப்பது தெரிகிறது. படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பாடலுடன் ஓப்பனிங், காமெடிக்கு கருணாகரன், யோகி பாபு, சின்ன சின்ன காமெடிகள், காதல், பாட்டு என முழுக்க ஒரு கமர்சியல் சினிமாவுக்கு தேவையான அத்தனையும் படத்தில் இருக்கிறது. அதோடு ஏலியன் வரும் காட்சிகளும் அதனை குழந்தைகள் ரசிக்கும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக வேலை இல்லை, படம் முழுக்க ஏலியனை சுற்றி தான். ஏலியனோடு இணைந்து அவரும் எல்லா சேட்டைகளும் செய்து, ரசிக்க வைக்கிறார். படத்தில் அவரைத்தாண்டி கவர்வது யோகி பாபு கருணாகரன் கூட்டணிதான். கிடைத்த இடங்களில் எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார்கள். ஹீரோயினாக வரும் ரகுல் பிரீத் சிங் பெரிய வேலை இல்லை.
சிஜி காட்சிகள் ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்து நமக்கு, அதை ஒரு தமிழ் படத்தில் பார்ப்பது பெரும் சந்தோஷத்தை தருகிறது. அதுவும் அதை நம்பும்படி தத்ரூபமாக தந்திருக்கிறார்கள். எந்த ஒரு இடத்திலும் இது சிஜி என சொல்ல முடியவில்லை. ஏலியனின் உருவம் தத்ரூபமாக அமைந்திருக்கிறது.
படத்தின் இசை ஏ ஆர் ரகுமான் படத்திற்கு தேவையானதை மட்டும் சரியாக தந்திருக்கிறார் மற்றபடி சொல்லும்படி இல்லை.
திரைக்கதையில் தான், அங்கங்கே பெரிய பெரிய பள்ளம் இருக்கிறது. லாஜிக் ஓட்டைகளும் ஏராளம். இது முழுக்க குழந்தைகளுக்கும் குடும்ப பார்வையாளர்களுக்கும் என்பதால், திரை ஆர்வலர்களுக்கு பிடிக்காமல் போகலாம். கதையில் எந்தவித திருப்பங்களும் ஆச்சரியங்களோ இல்லை. இதையெல்லாம் சரி செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கும்..
இயக்குனர் ரவிக்குமார் குடும்பங்களோடு கொண்டாட மீண்டும் ஒரு சிறப்பான சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தை அழகாக தந்திருக்கிறார்.
இந்த பொங்கல் குழந்தைகளுக்கு அயலான் பொங்கல் தான்.
Rating 3/5