ஆலகாலம் படம் எப்படி இருக்கு

ஆலகாலம்

இயக்குனர் – ஜெயகிருஷ்ணா
நடிகர்கள் – ஜெயகிருஷ்ணா , ஈஸ்வரி ராவ் , சாந்தினி
இசை – என்.ஆர்.ரகுநந்தன்
தயாரிப்பு – ஜெயகிருஷ்ணா

ஒரு தாய் தன் மகனை சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு வளர்த்து படிக்க வைத்து அவனை பொறியியல் கல்லூரியில் சேர்க்கிறார், கஷ்டத்தில் இருக்கும் தன் குடும்பத்தின் நிலமை தன் மகன் படித்து முடிந்ததும் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்கிறார். ஆனால் அவன் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்து ஏமாந்து அதன் விரக்தியில் மதுவிற்கு அடிமையாகிறான், இதனை நினைத்து தாய் வேதனை அடைகிறாள் , இதன் பின் என்ன ஆனது அந்தக் குடும்பத்தின் நிலை மாறியதா அவன் மதுப்பழக்கத்தை விட்டானா என்பதே படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக வெள்ளந்தியான சிரிப்போடு இயல்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் நடிகர் ஜெயகிருஷ்ணா, இரண்டாம் பாதியில் மது பழக்கத்திற்கு அடிமையான மனிதராக வெளிப்படுத்திய நடிப்பு அசுரத்தனமாக இருப்பதோடு, ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டவும் வைக்கிறது. ஒரு முதல் கட்ட நடிகர் போல இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், “சாமியே கேட்டாலும் நான் மதுவை வைத்து படையல் போட மாட்டேன்” என்று பேசிவிட்டு, தனது மகனின் நிலையை பார்த்து அவருக்காக மதுக்கடையில் மது வாங்கும் காட்சி படம் பார்ப்பவர்களை நிச்சயம் கலங்க வைக்கும். ஒரு தாயின் கவலையை தன் முகத்தில் உணர்வுப் பூர்வமாக காட்டியுள்ளார்,

நாயகியாக நடித்திருக்கும் சாந்தினி, கல்லூரி மாணவி மற்றும் மனைவி என இரண்டுவிதமான வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவதோடு, இரண்டு வேடங்களிலும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

கா.சத்தியராஜின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கதையின் கனத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய வைத்துவிடுகிறது.அழுத்தமான கதைக்கு பொருத்தமான பாடல்கள் மற்றும் பின்னணி இசையை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.படத்தொகுப்பாளர் மு.காசிவிஸ்வநாதன், எந்த காட்சியை வேகமாக நகர்த்த வேண்டும், எந்த காட்சியை விரிவாக சொல்ல வேண்டும் என்பதை மிக சரியாக செய்து, நாயகனின் நடிப்பும், அதன் மூலம் சொல்ல வேண்டிய கருத்தையும் ரசிகர்கள் எளிதியில் புரிந்துக்கொள்ளும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

கதையின் நாயகன், இயக்குநர், தயாரிப்பாளர் என்று முதல் படத்திலேயே மூன்று பணிகளை மேற்கொண்டிருக்கும் ஜெயகிருஷ்ணா, மூன்றிலும் முத்திரை பதித்திருப்பதோடு, தனது முதல் படத்தின் மூலம் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படத்திற்காக அத்தனை உழைப்பை கொடுத்துள்ளார்,

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை மதுப்பழக்கத்தால் எப்படி சீரழிகிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயகிருஷ்ணா, ஒரு மனிதனை மது பழக்கம் எப்படி எல்லாம் ஆட்கொள்கிறது என்பதை காட்சிக்கு காட்சி சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

இந்தப் படத்தின் கதை ஒரு சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் ஏக்கத்தை நினைவு கூரும் வகையில் உள்ளதால் பலரும் எலிதாக புரிந்து கொள்ளும் அளவு இந்தப் படம் உள்ளது.கொடிய விஷம் என்று தெரியாமல் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி பலர் தங்களது வாழ்க்கையை எப்படி சீரழித்துக் கொள்கிறார்கள், என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் இந்த திரைப்படம் தற்போதைய காலக்கட்டத்திற்கு மிக அவசியமான ஒன்றாகும்.

மொத்தத்தில் இந்த ‘ஆலகாலம்’ மதுவை பற்றிய ஒரு விழிப்புணர்வு

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *