Rating 2.8/5
எமக்கு தொழில் ரொமான்ஸ்
இயக்கம் – பாலாஜி கேசவன்
நடிகர்கள் – அசோக் செல்வன் , அவந்திகா மிஸ்ரா, எம்எஸ் பாஸ்கர்
இசை – நிவாஸ் கே பிரசன்னா
தயாரிப்பு – திருமலை
இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் உள்ள நாயகன் சினிமாவில் அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்து வருகிறார். இவர் ஒரு ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் மீது காதல் வயப்படுகிறார். இருவரும் ஒரு கட்டத்தில் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். அப்பொழுது நாயகனை நாயகி தப்பாக புரிந்து கொண்டு அவரிடமிருந்து பிரிந்து சென்று விடுகிறார். பின்பு இவர்கள் இருவரும் ஒவ்வொரு முறை மீண்டும் சேர்வதற்கான எடுக்கும் முயற்சியில் ஏதோ ஒரு பிரச்சனை வந்து வந்து இவர்களை சேர விடாமல் செய்கிறது. இப்படியே இவர்களின் பிரச்சனை நீண்டு கொண்டே போகும் பொழுது இறுதியில் இவர்களை சேரவிடாமல் செய்யும் பிரச்சனைகளை நாயகன் தீர்த்தாரா, இல்லையா? அப்படி இவர்களுக்குள் வரும் பிரச்சனைகள் என்ன? இறுதியில் காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
சமீப காலங்களாக நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ரசிக்கும்படியான படங்களை கொடுத்து கவனம் பெற்று வரும் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன் தற்பொழுது எனக்குத் தொழில் ரொமான்ஸ் படம் மூலம் மீண்டும் களத்தில் குதித்து இருக்கிறார். நாயகன் அசோக் செல்வன் வழக்கம் போல் தனது துருதுருவான நடிப்பை படத்தில் கொடுத்திருக்கிறார்.
அவருக்கு ஈடு கொடுத்து நாயகி அவந்திகா மிஸ்ரா நடித்து வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை வழக்கமான முறையில் செய்து இருக்கிறார். இவர்களுடன் நண்பர்களாக நடித்திருக்கும் நடிகர்களும் சிறப்பான முறையில் பங்களிப்பு கொடுத்து படத்தை நகர்த்த நன்றாக முயற்சி செய்திருக்கின்றனர். அதேபோல் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் அழகம் பெருமாள் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அம்மாவாக வரும் ஊர்வசி வழக்கம் போல் தனது வெகுளியான நடிப்பின் மூலம் பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறார். மாமாவாக வரும் படவா கோபி, டாக்டராக வரும் எம்எஸ் பாஸ்கர் உட்பட பலரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு சிறப்பு கூட்டி உள்ளனர். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைத்து நடிகர்களும் ஒன்று சேர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கின்றனர்.
நிவாஸ் கே பிரசன்னா இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை காதல் காட்சிகளுக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறது. அதேபோல் காமெடி காட்சிகளிலும் பழைய இளையராஜா மியூசிக்கை பயன்படுத்தி ஆங்காங்கே சிரிக்கவும் வைத்திருக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் குடும்பம் மற்றும் நண்பர்கள் சம்பந்தப்பட்ட காதல் மற்றும் காமெடி காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் படத்தின் கதை கிட்டத்தட்ட பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு டிரெண்ட்டில் உருவானது, பெரிதாக வேலை வெட்டி இல்லாத ஒரு நாயகன் வேலை செய்யும் நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கிறார். நாயகி ஒரு கட்டத்தில் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார் இருவரும் சேரப்போகும் சமயத்தில் அவர்களை சேரவிடாமல் சில பிரச்சனைகள் வந்து சேர்கிறது. அதை அவர்கள் எப்படி தீர்த்து மீண்டும் ஒன்று சேர்ந்தனர் என்ற அரதபழசான ஒரு கதையை வைத்துக் கொண்டு அதை இக்கால ரசிகர்கள் ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி கேசவன்.
குறிப்பாக முதல் பாதையை காட்டிலும் இரண்டாம் பாதியில் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டு நல்ல சிரிக்கும்படியான காமெடி காட்சிகள் மூலம் படத்தை கரை சேர்த்து பார்ப்பவர்களுக்கும் நிறைவை கொடுத்திருக்கிறது. காதல் காட்சிகளை காட்டிலும் காமெடி காட்சிகளுக்கு நன்றாக முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் கூட்டமாக சென்று ரசிப்பதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் இந்த ” எமக்கு தொழில் ரொமான்ஸ் ” நகைச்சுவை விருந்து.
Rating 2.8/5