கன்னி
இயக்குனர் – மாயோன் சிவ துரைப்பாண்டி
நடிகர்கள் – அஷ்வினி சந்திரசேகர் , மணிமாறன் ராமசாமி , தாரா கிரிஷ்
இசை – செபாஸ்டியன் சதிஷ்
தயாரிப்பு – செல்வராஜ்
ஒரு பெண் தனது தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள் அங்கு அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.பிறகு அவளது முன் கதை காட்டப்படுகிறது.அவள் தனது அண்ணன் , அண்ணி என அண்ணன் குடும்பத்தோடு மிகவும் பாசமாக இருக்கிறாள்.அவர்களின் ஊர் மூலிகைக்குப் பெயர் போனது. உயிராபத்து நோய்களையும் தீர்க்கும் மூலிகைகளும் மருந்துகளும் அங்கே உண்டு. அதைப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த இயற்கை வளங்களை ஆக்கிரமித்து வணிக மயமாக்கி பயன்படுத்திக் கொள்ள ஒரு கும்பல் முயல்கிறது.அதற்கு இடையூறாக இருப்பவர்களைத் துன்புறுத்தி கொலையும் செய்கிறார்கள், அப்படி அந்தப்பெண்னின் அண்ணனும் அண்ணியும் கொல்லப்படுகிறார்கள். அந்த மூலிகை ரகசியத்தையும் தன் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அண்ணனின் இரு குழந்தைகளுடன் தப்பித்து வெளியூர் ஓடுகிறாள் .அப்படித்தான் தனது தாத்தா ஊருக்கு வருகிறாள். எங்கு சென்றாலும் அவளை அந்தக் கும்பல் தேடி வந்து துரத்துகிறது. அவள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள்? அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாளா? அந்த மூலிகை மருந்துகளையும் மாந்திரீக ரகசியங்களையும் காப்பாற்றினாளா என்பதுதான் மீதிக் கதை.
இந்தப் படத்தில் சேம்பியாக அஷ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் .கொஞ்சம் கூட நடிப்பு என்று தெரியாமல் அந்த சேம்பியாகவே வாழ்ந்துள்ளார்அதேபோல வேடனாக வரும் மணிமாறன், அவரது மனைவி நீலிமாவாக வரும் தாரா கிரிஷ் இருவரும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.எதிர்மறைக் கதாபாத்திரத்தில் வரும் ராம் பரதனும் மலைவாசி மனிதராகவே மாறியுள்ளார்.இவர்கள் தவிர படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கூட நடிப்பில் யதார்த்தம் காட்டி அந்த மலைக் கிராமத்தில் வாழும் மனிதர்களாகவே நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் நடக்கும் இடங்கள் இயற்கை காட்சிகளால் மிகைந்துள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி ,மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் காட்சிகள் வருகின்றன. மலைப்பகுதியில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் பல்வேறு கோணங்களில் படமாக்கி கண்முன்னே அழகான ஓவியங்களாகக் காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார். முழுக்க முழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கி உள்ளார். யதார்த்தமாக மட்டுமல்ல அழகியலும் நிறைந்த காட்சிகள் படத்தின் பெரும் பலம். இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்.குறிப்பாக உச்சகட்ட காட்சியில் வசனங்களே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. அவரது பின்னணி இசை தான் பேசுகிறது.பாடல் இசையிலும் குறையில்லை .
இந்தப்ப்டத்தில் நடிகர்களும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள். படத்தில் ஏதோ ஒரு போதாமையை உணர முடிகிறது. சொல்ல வேண்டிய கருத்துக்களை, உணர்வுகளை அழுத்தமான காட்சிகளால் உருவாக்காமல் மேலோட்டமாக கதை நகர்வது படத்தின் பெரும் பலவீனமாக இருக்கிறது.
இதில் சித்த மருத்துவத்தின் மகிமை பற்றிப் பேச முயன்றுள்ளனர். கார்ப்பரேட் நிறுவனம் நம் பாரம்பரியத்தை வணிகப்படுத்தும் முயற்சியில் இருப்பதும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவுமே அழுத்தமாகச் சொல்லப்படாதது பெரிய குறையாக உள்ளது.படத்தில் சில பாத்திரங்களுக்கு அழுத்தமான காரணம் இல்லாததால் ஒட்ட மறுக்கின்றன.
மொத்தத்தில் இந்த ‘கன்னி’ இயற்கையின் அழகையும் அங்கு வாழும் மக்களின் பாரம்பரியத்தை சுட்டிக் காட்டியுள்ளது,
Rating 3.3/5