கள்வன் படம் எப்படி இருக்கு?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இருட்டி பாளையம் கிராமத்திலுள்ள மக்கள் காட்டு யானைகளால் உயிரிழப்புகளையும் பொருள் இழப்புகளையும் சந்திக்கிறார்கள். மறுபுறம், அதே கிராமத்தில் சிறு சிறு திருட்டுகளைச் செய்து, கெம்பராஜும் (ஜி.வி,பிரகாஷ் குமார்) சூரியும் (KPY தீனா) வாழ்ந்து வருகிறார்கள். வனக்காவலர் பணியில் சேர முயன்றுகொண்டிருக்கும் கெம்பா, முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவைத் தத்தெடுத்து, தன் வீட்டிற்குக் கூட்டி வர காரணம் என்ன, காட்டு யானைகளால் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் என்ன, இறுதியில் தன் ஆசைப்படி வனக்காவலர் பணியில் கெம்பா சேர்ந்தாரா இல்லையா என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்

ஜி.வி.பிரகாஷின் இசையில், ‘அடி கட்டழகு கருவாச்சி’ பாடல் மட்டும் இதம் தருகிறது. மற்ற பாடல்கள் திரைக்கதைக்கு வேகத்தடை மட்டுமே. முழு படத்திலும் தன் பின்னணி இசையால் நிரப்பியிருக்கிறார் ரேவா. க்ளைமாக்ஸ் காட்சியின் சேஸிங்கில் அது க்ளிக் ஆகியிருக்கிறது. என்.கே.ராகுலின் உழைப்பைக் கலை இயக்கத்தில் உணர முடிகிறது. யானைகள் தொடர்பான காட்சிகளிலிருந்த நேர்த்தி, புலி தொடர்பான காட்சியில் சறுக்குகிறது. ஏதோ பொம்மை புலியைக் கொண்டு வந்த அனிமேஷன் செய்த வகையில் படு செயற்கையாக இருக்கிறது அந்த சீக்குவென்ஸ்.

வீடுகளுக்குள் புகுந்து திருடுவது, காதலி பின்னால் சுற்றுவது, நண்பனுடன் சேர்ந்து கிராமத்தினரைக் கலாய்ப்பது என ஜாலியான இளைஞனாக ஜி.வி.பிரகாஷ். சிறப்பாக நடித்துள்ளார்

நண்பனாக வரும் KPY தீனா படத்தின் தொய்வான பல இடங்களில் தன் காமெடிகளால் ஓரளவிற்கு ஆறுதல் தருவது இவர் மட்டுமே!

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் பாரதிராஜாவின் சேட்டைகளும், காட்டு யானை இவர்களைப் படுத்தும் பாடும் சிறிது சுவாரஸ்யமாக்குகிறது. ரேஷன் கடை, விவசாயம் நிலம் என மாற்றி மாற்றி இவர்கள் இரவில் காவல் செய்யும் எபிசோடு ஆறுதல்தரும் காமெடி. உணர்வுபூர்வமான காட்சிகள் யூகிக்கும்படி க்ளீஷேவாக இருந்தாலும், அதை தன் நடிப்பால் ஓரளவிற்கு நேர் செய்ய முயன்றிருக்கிறார் பாரதிராஜா.

எளிமையாகவும், உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்க வேண்டிய கதையை, தேவையே இல்லாத பின்கதைகள், பாடல்கள் எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறார்கள். சிறு குறைகள் இருந்தாலும்
குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *