
காதலிக்க நேரமில்லை
இயக்கம் – கிருத்திகா உதயநிதி
நடிகர்கள் – ஜெயம் ரவி, நித்யா மேனன், வினய், யோகி பாபு
இசை – ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின் – ரெட் ஜெயன்ட் மூவிஸ்
சித்தார்த் என்பவர் தனது நண்பர்களுடன் இணைந்து தங்களது விந்தணுவை சேமித்து வைக்க முடிவு செய்கின்றனர். அப்போது அவரின் விந்தணு தவறுதலாக டோனர் லிஸ்ட்டில் சேர்க்கப்பட, 4 வருஷம் காதல் செய்து ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொள்ளும் ஒருவனால் ஏமாற்றப்படும் ஒரு பெண் ஆண்களை வெறுத்து குழந்தையை பெற்றுக் கொள்ள கணவன் தேவையில்லை என்றும் ஃபெர்டிலிட்டி சென்டரில் முன் பின் தெரியாத டோனர் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிறார். அதன் பின்னர் என்ன ஆகும் என்பது கணிக்க முடிந்தது தான். அதே போலவே நடக்கிறது. ஆனால், இந்த விஷயம் இருவருக்கும் தெரிய வருகிறதா? இல்லையா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த காதலிக்க நேரமில்லை படத்தின் கதை
ரவியின் காதலியான டிஜே பானு ரவிக்கு குழந்தைகள் என்றாலே பிடிக்காது என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்வதை தெரிந்துக் கொண்டு அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், நிச்சயதார்த்தத்துக்கு வராமல் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு செல்கிறார். ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துக் கொள்ளும் நித்யா மேனன் தனது கணவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க அவருக்கு தெரியாமல் வீட்டுக்கு வர அங்கே அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக நித்யா மேனன் தோழியுடன் ஜான் கொக்கன் உல்லாசமாக இருக்க அதை பார்த்துவிட்டு அவரை வெறுத்து ஒதுங்குகிறார்.
ஃபெர்ட்டிலிட்டி சென்டர் மூலமாக குழந்தைப் பெற்றுக்கொள்ள தனது குழந்தைக்கு யார் அப்பா என்பதை அறிந்துக் கொள்ள கொடுக்கப்பட்ட அட்ரெஸுக்கு செல்லும் நித்யா மேனனுக்கு பெயர் மற்றும் முகவரி என இரண்டுமே போலி என்பது தெரிய வருகிறது. ஆனால், தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல ரவியை சந்திக்க நேரிடுகிறது. ரவிக்கு குழந்தை என்றாலே பிடிக்காது என்பதை அறிந்து அவரையும் விட்டு விலகி 8 வருடங்கள் தனது மகனுடன் வசித்து வரும் நித்யா மேனன் மீண்டும் ரவியை சந்திக்கும் சூழல் ஏற்பட இருவருக்கும் இடையே பிசினஸ் மோதல் வந்து இடையே இடையூறாக நிற்பது சுவாரஸ்யம். ஜெயம் ரவியின் நண்பராக வினய் ஓரினச்சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, அவருக்கு கடைசியில் நடக்கும் திருமணம் எல்லாமே ஏதோ ஆங்கில படத்தை பார்க்கும் உணர்வை புகுத்துகிறது.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை தான் இந்த படத்திற்கு முழு பலம் என்று சொல்லலாம். “என்னை இழு இழு இழுக்குதடி” மற்றும் “லாவண்டர் பெண்ணே” பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஜிகர்தண்டா, மிஷன் சாப்டர் ஒன், டீன்ஸ் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கேவ்மிக் யூ ஆரியின் ஒளிப்பதிவு இந்த படத்துக்கு செம ரிச் லுக்கை கொடுத்துள்ளது. புரொடக்ஷன் வேல்யூவும் கண்முன்னே தெளிவாக தெரிகிறது. ஜெயம் ரவியை சமீபத்தில் இந்த படத்தில் தான் ரொம்ப அழகாக காட்டியுள்ளனர் என்றே சொல்லலாம். யோகி பாபு அவ்வப்போது வந்து சில காமெடிகள் செய்து சிரிக்க வைக்கிறார். நித்யா மேனனின் மகனாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரத்தின் நடிப்பு 2ம் பாதியில் ரசிகர்களை போரடிக்க விடாமல் கொண்டு செல்ல ரொம்பவே உதவியிருக்கிறது.
மொத்தத்தில் இந்த ” காதலிக்க நேரமில்லை ” ஒரு ஃபீல் குட் படம்
Rating 3.3/5