Rating 3/5

சொர்க்க வாசல்
இயக்கம் – சித்தார்த்
நடிகர்கள் – ஆர் ஜே பாலாஜி , செல்வராகவன் , கருணாஸ் , பாலாஜி சக்திவேல்
இசை – கிரிஸ்டோ சேவியர்
தயாரிப்பு – திங்க் ஸ்டுடியோ
செய்யாத கொலைக்கு குற்றவாளியாக்கப்படும் ஒருவன் சென்னை மத்திய சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்படுகிறார். சிறைச்சாலையில் ரவுடி ஒருவன் ராஜ்ஜியம் நடத்த, அவருக்கும் புதிதாக வரும் சிறை அதிகாரிக்கும் மோதல் ஏற்படுகிறது. தான் குற்றம் அற்றவன் என்பதை நிரூபித்து விடுதலையாக வேண்டும் என்று நினைக்கும் அவனின்ன் எண்ணத்தை புரிந்துக்கொள்ளும் அதிகாரி, அவனை வைத்தே, அந்த ரவுடிக்கு முடிவு கட்ட திட்டம் போடுகிறார். அதிகாரியின் திட்டத்தை மீறி வேறு ஒன்று நடக்க, அதன் மூலம் சிறைச்சாலையில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுகிறது. அந்த கலவரம் நாயகனின் வாழ்க்கையை எப்படி புரட்டிப்போடுகிறது, அவர் நினைத்தது நடந்ததா?, சிறை அதிகாரி நினைத்தது நடந்ததா? ஆகிய கேள்விகளுக்கான பதில்களை, உண்மை சம்பவத்தின் பின்னணியின் மூலம் சொல்வதே ‘சொர்க்கவாசல்’.
இந்தப் படம் 1999 ஆம் ஆண்டு சென்னை சென்ட்ரல் மத்திய சிறைச்சாலையில் நடந்த கலவரத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும், உண்மை சம்பவத்தின் பின்னணியாக பத்திரிகைகளில் வந்த செய்திகளை மட்டுமே படத்தில் சொல்லியிருக்கிறார்களே தவிர, புதிதாக எதையும் சொல்லவில்லை. அதே சமயம், உண்மை சம்பவம் தான் படத்தின் கதைக்கரு என்றாலும் அதை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க சிறைச்சாலையை களமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தில் அப்பாவி இளைஞராக நடித்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு வருபவர், அந்த சூழலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது, அதே சிறைச்சாலையில் நடக்கும் சதிவலையில் சிக்கினாலும் அதில் இருந்து மீள்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள், என கதைக்கான ஹீரோவாக மட்டும் இன்றி, பலமான கதையை தாங்க கூடிய ஒரு நடிகராகவும் பயணித்திருக்கிறார்.
சிகாமணி என்ற ரவுடி கதாபாத்திரம் செல்வராகவனின் உருவத்திற்கு பொருந்தவில்லை என்றாலும், வசன உச்சரிப்பு, நடிப்பு ஆகியவற்றின் மூலம் அந்த கதாபாத்திரத்தை சற்று தாங்கிப் பிடித்திருக்கிறார். சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஷரப் யுதீன், துணை அதிகாரியாக நடித்திருக்கும் கருணாஸ், விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ், டைகர் மணியாக நடித்திருக்கும் ஹக்கிம்ஷா, பாலாஜி சக்திவேல், சீலன் வேடத்தில் நடித்திருக்கும் அந்தோணிதாசன் தேசுதாஸ், ரவி ராகவேந்திரா, கெண்ட்ரிக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாமுவேல் ராபின்சன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் சிறை கலவரத்தை காட்சிப்படுத்திய விதம் எதார்த்தமாக இருக்கிறது. இசையமைப்பாளர் கிரிஸ்டோ சேவியரின் பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு உயிரளித்திருக்கிறது. இசைதான் பெரிய பலம் என்று சொல்லலாம்,
இயக்குநர் சித்தார்த் விஷ்வநாத், சிறைக்குள் கதை நடந்தாலும், காட்சிகளை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதோடு, கலவரத்திற்கு சிகாமணியின் மரணம் காரணமாக இருந்தாலும், கலவரம் தீவிரமடைந்த பிறகு முக்கிய காரணத்தை மறந்துவிட்டு, ஆளாளுக்கு ஒரு காரணத்திற்காக கலவரத்தில் ஈடுபட்டதை காட்சியமைப்பாகவும் சரி, எழுத்து மூலமாகவும் சரி மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதை மிக சிறந்த முறையில் காட்சிப்படுத்தி மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘சொர்க்கவாசல்’ ஒரு நல்ல மேக்கிங்கிற்கு உதாரணம்.
Rating 3/5