
மனிதர்கள்
இயக்கம் – இராம் இந்திரா
நடிகர்கள் – கர்லி, கபில் வேலவன், தக்ஷா , அர்ஜுன் தேவ்
இசை – அனிலேஷ் எல் மாத்யூ
தயாரிப்பு – ஜெனரஸ் எண்டர்டெயிண்மண்ட்
திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆறு நண்பர்களும், நடு இரவில் குடிபோதையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.இதில் எதிர்பாராதவிதமாக, மது பாட்டில் குத்தி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுகிறார் பிரேம் என்பவர். இந்தக் கொலைக்கு யார் காரணம் என நண்பர்களுக்குள் வாக்குவாதமும் சண்டையும் வருகின்றன.என்ன செய்வதென்று தெரியாமல், பிதற்றத் தொடங்கும் நண்பர்களை ஆசுவாசப்படுத்தி, பிரேமின் உடலைத் தங்களுடைய கார் டிக்கியில் மறைக்கிறார் கர்லி.நடு இரவில் அங்கிருந்து கிளம்பும் நண்பர்கள், பிரேமின் உடலை என்ன செய்தார்கள், போலீஸிடம் மாட்டினார்களா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கியிருக்கும் இந்த ‘மனிதர்கள்’.
படத்தில் பல புது முகங்கள் நடித்துள்ளனர் ,அத்தனைப் பதற்றத்திலும், பக்குவமான முடிவுகளையும், நண்பர்களிடம் கண்டிப்பையும் காட்டும் கர்லி கதாபாத்திரத்திற்கு, கபில் வேலவனின் தேர்வு கச்சிதம்.சிறிது மர்மத்தையும் சிறிது வில்லத்தனத்தையும் ஆங்காங்கே, துறுத்தலின்றி கொண்டு வந்திருக்கிறார்.
தன் அழுகை, ஆக்ரோஷத்திற்கு இடையே தெக்கத்தி வட்டார வழக்கு பேச்சில் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கின்றார் தக்ஷா.அதீத போதையில், குற்றவுணர்வு, அழுகை என இரண்டு மீட்டரில் மாறிமாறி நகரும் சந்திரன் கதாபாத்திரத்தில், அழுத்தம் கூட்டியிருக்கிறார் சம்பா சிவம். அர்ஜுன் தேவ் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்.
ஆற்றாமை, அழுகை, பயம், குற்றவுணர்வு என அடுத்தடுத்து அணிவகுக்கும் உணர்வுகளுக்குக் குரலாக ஒலித்திருக்கிறது அனிலேஷ் எல் மாத்யூவின் பின்னணி இசை, படம் முழுக்க ஓர் இரவில், பெரும்பாலும் காருக்குள்ளேயே நகரும் படத்திற்கு, ஒளி அமைப்பால் அட்டகாசமான ஒளிப்பதிவைக் கொடுத்திருக்கிறார் அஜய் ஆபிரகாம் ஜார்ஜ். முக்கியமாக, கார் ஹெட்லைட்டை மட்டும் பயன்படுத்திய காட்சிகளில் தன் பெயரைப் பதிக்கிறார் அஜய்!
ஓர் இரவு, ஐந்து நண்பர்கள், ஒற்றைச் சம்பவம், அதைத் தொடர்ந்து நடக்கும் பதைபதைப்பு நிறைந்த சம்பவங்கள் போன்றவற்றை த்ரில்லர் மோடில் ‘ராவாக’ சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் இராம் இந்திரா, இந்த முயற்சி அவருக்கு வெற்றியை கொடுத்துளது.
மொத்தத்தில் இந்த “மனிதர்கள்” சஸ்பென்ஸ் விருந்து
Rating 3/5