அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்

’அங்கம்மாள்’ திரைப்பட விமர்சனம்

நடிப்பு (Casting):
கீதா கைலாசம், பரணி, சரண் சக்தி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன்

இயக்கம் (Directed By):
விபின் ராதாகிருஷ்ணன்

இசை (Music By):
மொஹமட் மக்பூல் மான்சூர்

தயாரிப்பு (Produced By):
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், எஞ்ஜாய் பிலிம்ஸ், ஃபிரோ மூவி ஸ்டேஷன்
– கார்த்திகேயன். எஸ், ஃபிரோஸ் ரஹீம், அஞ்சோய் சாமுவேல்

இளம் பருவத்திலேயே கணவரை இழந்த கீதா கைலாசம், தனது வாழ்க்கையை ஓரஞ்சாய் ஒதுக்கி வைத்து, இரண்டு மகன்களின் எதிர்காலமே தனது கனவாகக் கொண்டு போராடுகிறார். பால் வியாபாரம், விவசாய வேலைகள் என தினம் தினம் உயிர் சுரக்கும் உழைப்பில் மூழ்கியவர். அதே நேரத்தில், பழமைக்கு கட்டுப்பட்ட, ஜாக்கெட் கூட அணியாத பாரம்பரியச் சாயலுடன் வாழும் தைரியமான பெண்ணாக ஊரே வியக்கும் உருவமாக திகழ்கிறார்.

மூத்த மகன் விவசாயி பரணி திருமணமாகி அம்மாவுடனே வாழ, இளைய மகன் சரண் படிப்பில் முன்னேறி மருத்துவராகிறார். செல்வச் சூழலில் வளரும் ஒரு பெண்ணை அவர் காதலிக்க, திருமணத்துக்கும் சம்மதம் கிடைக்கிறது. ஆனால், ஜாக்கெட் அணியாத தனது அம்மாவை பெண் வீட்டார் தவறாக எண்ணக் கூடாது என்பதாலும், காலத்துக்கு ஏற்ற மாற்றம் அவசியம் என்பதாலும், அண்ணியின் உதவியுடன் அம்மாவை ஜாக்கெட் அணிய வைக்கிறார்.

ஆனால், தன் மீது உள்ள அக்கறையை விட, மற்றவர்களின் பார்வைக்காகவே தன்னை மாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதைக் கீதா கைலாசம் உணரும் தருணம், அவள் இன்னும் உறுதியாய் நிற்கச் செய்வதாகிறது. “எப்படி இருந்தேனோ, அப்படியேதான் இருக்கிறேன்” என்ற முடிவோடு, வழக்கம்போல் சுதந்திரமாகவும், தனக்குப் பிடித்த வாழ்க்கையையும் தேர்ந்தெடுக்கிறாள். ஆனால், அவளை கட்டாயமாக மாற்ற வேண்டும் என்ற குடும்பத்தின் முயற்சிகளால், அதன் பின் தொடரும் சம்பவங்கள்தான் கதையின் மீதிப்பகுதி.

அங்கம்மாள் கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், ஜாக்கெட் அணியாத தோற்றம், சுருட்டு பிடிக்கும் நடை போன்றவற்றின் மூலம் அந்தக் கதாபாத்திரத்தை உடலோடு உயிரோடும் ஏற்றுள்ளார். தைரியம், கடுமையான உழைப்பு, மனதில் தோன்றியதை தயங்காமல் பேசும் சுபாவம், சுதந்திரமாகச் சுற்றி வரும் பெண் என்ற அங்கம்மாளின் தன்மைகளை அவர் தனது நடிப்பில் நேர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். இருந்தாலும், அந்தக் கம்பீரமான பெண்ணின் முழு கனத்தையும் முதிர்ச்சியோடும் உடல்மொழியோடும் முழுமையாக வெளிக்காட்டும் சில தருணங்களில் சிறிய தடுமாற்றம் தெரிகிறது. இருப்பினும், மொத்தத்தில் இது கவனிக்கத் தகுந்த நல்ல முயற்சியாகவே திகழ்கிறது.

பரணி, தென்றல், சரண், முல்லையரசி, சுதாகர், சிறுமி யாஷ்மின் என அனைத்து துணை நடிகர்களும் தங்கள் வேடங்களில் இயல்பாக நடித்து, ‘அங்கம்மாள்’ கதைக்கு நல்ல பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அஞ்ஜாய் சாமுவேல், லொக்கேஷன்களை இன்னொரு கதாபாத்திரமாக மாற்றி, முதல் காட்சியிலேயே பரந்த நிலப்பரப்பால் பார்வையாளரை கவர்கிறார். அங்கம்மாளின் வீடு, மலை, தென்னைகள் சூழ்ந்த வயல்வெளி என ஒவ்வொரு காட்சியும் ஓவியத்தனமான அழகுடன் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.

முகமது மக்பூல் மன்சூரின் பின்னணி இசை, சத்தமில்லாமல் காட்சிகளுக்குள் நுழைந்து உணர்வுகளை மெதுவாகத் தூண்டுகிறது; படத்திற்கு அது ஒரு பெரிய பலம்.

பிரதீப் சங்கரின் படத்தொகுப்பு, அங்கம்மாளின் மனநிலையையும் எண்ண ஓட்டங்களையும் நேர்த்தியாக பார்வையாளரிடம் சேர்க்கிறது.

பெருமாள் முருகனின் சிறுகதையை திரைக்கதையாக்கி இயக்கிய விபின் ராதாகிருஷ்ணன், ஒரு பெண்ணின் வாழ்வியல் போராட்டத்தை எளிமையும் எதார்த்தமும் கலந்த தொனியில் பதிவு செய்துள்ளார்.

வலிமையும் சுதந்திரமும் கொண்ட பெண்ணாக இருந்தாலும், பிள்ளைகளுக்காக தன் தனிப்பட்ட சுதந்திரத்தை மெல்ல விட்டுக் கொடுக்கும் அங்கம்மாளின் பயணத்தின் மூலம், பெண்கள் எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும் சில சூழல்கள் அவர்களை முழுமையாக தங்கள் விருப்பப்படி வாழ விடுவதில்லை என்ற வாழ்க்கை உண்மையை இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்.

ரேட்டிங்: 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *