சிறை படம் எப்படி இருக்கு?

’சிறை’ திரைப்பட விமர்சனம்

நடிப்பு: விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்த தம்பிராஜா
இயக்கம்: சுரேஷ் ராஜகுமாரி
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பு: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ – எஸ்.எஸ். லலித் குமார் 🎬

கொலை வழக்கில் விசாரணை கைதியாக ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எல்.கே. அக்ஷய் குமார். அவரை சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொறுப்பு, விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் அணிக்கு ஒப்படைக்கப்படுகிறது. பாதுகாப்பான பயணமாக தொடங்கிய அந்த வழி, சில நிமிடங்களில் முற்றிலும் மாறுகிறது. தொடர்ச்சியான குழப்பங்கள்… கண் இமைக்கும் நேரத்தில் கைதி மாயம்.

போலீஸ் துப்பாக்கியுடன் தப்பிய அக்ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா? கொலை குற்றவாளி என சொல்லப்படும் அவரது உண்மை முகம் என்ன? அந்த கொலை யாருக்காக, எதற்காக? இந்த ஒரே தவறு விக்ரம் பிரபுவின் வாழ்க்கை, பணியை எப்படித் திசைமாற்றுகிறது?
இந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலாக, நிஜத்தை நெருக்கமாகத் தொட்டுக் கொண்டு, விறுவிறுப்பான திரைக்கதையில் நகரும் காவல்–கைதி த்ரில்லர்தான் ‘சிறை’ ⚖️🔥

கதையின் மைய நாயகனாக அல்லாமல், கதையின் ஓர் அங்கமாக மட்டும் தன்னைச் சுருக்கிக் கொண்ட விக்ரம் பிரபு, “என் படம்” என்பதைக் காட்டிலும் “நல்ல கதை” என்பதே முக்கியம் என்ற தனது தேர்வை இந்தப் படத்தில் உறுதியாக பதித்திருக்கிறார். ஹீரோயிசம், புகழ், ஸ்கோர் மியூசிக் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து, கதைக்குத் தேவையான அளவிலேயே தன்னை பயன்படுத்திக் கொண்டது அவரது நடிப்பின் பெரிய பலம்.

இதற்கு முன்பும் காவலர் வேடங்களில் தோன்றியிருந்தாலும், இங்கு பார்க்கும் விக்ரம் பிரபு முற்றிலும் வேறொரு பரிணாமம். சத்தமில்லாத கட்டுப்பாடு, கண்களில் தெரியும் பொறுப்பு, தவறுகள் நேரும் போது வெளிப்படும் உள் கலக்கம்—இவை எல்லாம் சேர்ந்து அவரது நடிப்பில் ஒரு இயல்பான முதிர்ச்சியை வெளிக்கொண்டு வருகிறது. இது “ஹீரோ விக்ரம் பிரபு” அல்ல; கதைக்குள் வாழும், நிஜத்திற்கு நெருக்கமான நடிகர் விக்ரம் பிரபு என்பதை ‘சிறை’ தெளிவாகச் சொல்லி விடுகிறது 🔥

தப்பித்து ஓடும் கைதியை மீண்டும் பிடிக்க போராடும் தருணங்களிலும், அதன் பின் எழும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வேளைகளிலும், நீதிமன்றக் காட்சிகளில் சொல்லும் ஒவ்வொரு வசனத்திலும்—விக்ரம் பிரபு நடிப்பை ‘நடிப்பு’ என்ற எல்லையைத் தாண்டச் செய்கிறார். குரலில் இருக்கும் கட்டுப்பாடு, உடல் மொழியில் வெளிப்படும் பதற்றம், கண்களில் தெரியும் பொறுப்பு உணர்வு—இவை அனைத்தும் சேர்ந்து அவர் ஒரு நடிகராக அல்ல, ஒரு உண்மையான காவலராகவே பார்வையாளர்களின் மனதில் பதிந்து விடச் செய்கின்றன. ‘சிறை’யில் விக்ரம் பிரபு நடிப்பது இல்லை; அவர் அந்த காவலராகவே வாழ்கிறார்.

மற்றொரு நாயகனாக அறிமுகமாகும் எல்.கே. அக்ஷய் குமார், நடிகருக்கான தீவிர பயிற்சியை தனது ஒவ்வொரு அசைவிலும் நிரூபிக்கிறார். பள்ளி பருவம் முதல் சிறை கைதி வரை தோற்றம்-மனநிலை மாற்றங்களை எளிதாக கடந்து, பார்வையாளர்களை கலங்க வைக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதி முழுவதையும் தன் எதார்த்தமான நடிப்பால் தாங்கிப் பிடிக்கும் அவரது நடிப்புக்கு திரையரங்கில் அப்ளாஷ் உறுதி. 👏

நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், எளிமையான அழகும் குழந்தைத் தனமான சிரிப்பும் கொண்டு கவனம் ஈர்க்கிறார். அளவான, இயல்பான நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

விக்ரம் பிரபுவின் மனைவியாக வரும் ஆனந்த தம்பிராஜா, குறைந்த காட்சிகளிலேயே திரைக்கதைக்கு தேவையான ஆழத்தை சேர்க்கிறார்.
ஜஸ்டின் பிரபாகரனின் இசை பாடல்களிலும் பின்னணி இசையிலும் கதையின் உணர்வுகளை நேரடியாக மனதுக்கு கொண்டு சேர்க்கிறது.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு இருள்–ஒளி கலவையில் நிஜத்தன்மையை அழகாக பதிவு செய்கிறது.
பிலோமின் ராஜின் படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி, சில இடங்களில் பதற்றத்தின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட எளிய கதையை, வலுவான திரைக்கதையாலும் எதார்த்தமான இயக்கத்தாலும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தாக்கம் கொண்ட படமாக மாற்றியிருக்கிறார். முதல் பாதியில் சிறு தொய்வு இருந்தாலும், காதல் கதை மற்றும் நடிப்புகள் அதை மறைத்து விடுகின்றன.

மொத்தத்தில், எளிய மக்களின் வாழ்க்கையையும் காவல்துறை அரசியலையும் பேசும் ஒரு தரமான பொழுதுபோக்கு படம் ‘சிறை’.
ரேட்டிங்: 4.2/5 ⭐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *