கோழிப்பண்ணை செல்லதுரை,
இயக்கம் – சீனு ராமசாமி
நடிகர்கள் – யோகி பாபு, பிரிகிடா, ஏகன்,
இசை – ரகுநந்தன்
தயாரிப்பு – அருளானந்த்
ராணுவத்திலிருந்து வந்த கணவர், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அவரையும் வீட்டிலிருந்த மற்றொரு நபரையும் தாக்குகிறார். மதுபோதையிலிருந்த அந்த நபரிடமிருந்து தப்பித்து ஊரைவிட்டு ஓடுகிறார்கள் இருவரும். இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவருடைய குழந்தைகள் இருவரையும் பாட்டி வீட்டில் விட்டுவிடுகிறார். அங்கே சென்ற சிறிது நாளிலே பாட்டியும் இறந்து விட, தூரத்துச் சொந்தமான பெரியப்பா பெரியசாமியின் துணையோடு வேலைக்குச் செல்கிறான் சிறுவன் செல்லதுரை . பதினொரு வயதில் ஆதரவற்ற நிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் செல்லதுரைக்குத் தங்கை ஜெயசுதா மீது அளவுகடந்து அன்பு. காலங்கள் ஓட, தங்கை கல்லூரிக்குச் செல்கிறார். செல்லதுரை, பெரியசாமி நடத்தும் கோழிக்கடையில் கறி வெட்டும் நபராக வேலை செய்கிறார். இப்படியிருக்க ஒரு காதலினால் ஏற்படும் திருப்பங்கள் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை எல்லாம் நிகழ்த்துகின்றன என்பதே இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’.
தங்கையின் மீது அளவற்ற பாசம், உழைத்து உழைத்து இறுக்கமாகவே இருக்கிற முகபாவனை எனத் திரைப்படத்தின் மொத்த பாரத்தையும் தாங்கி கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஏகன். நாயகனைச் சுற்றிவரும் டெம்ப்ளேட் நாயகியாக பிரிகிடா சாகா நடித்துள்ளார். மிகவும் முக்கியமான பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கும் யோகி பாபு வழக்கமான நையாண்டிகளைக் குறைத்து கதாபாத்திரத்துக்குத் தேவையான உணர்வுகளை ஆங்காங்கே வழங்கியிருக்கிறார். குட்டிப்புலி தினேஷின் லந்தான ஒன்லைனர்கள் வேலை செய்திருக்கின்றன. தங்கையாக நடித்துள்ள சத்யா சிறப்பாக தன்னுடைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தேனி மாவட்டத்தின் இயற்கை எழிலையும், வராக நதியின் ரம்மியத்தையும் சிறப்பான ஒளியுணர்வுடன் அளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக் ராஜ். என்.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையும் அதற்கேற்ப பீல்குட் உணர்வைக் கடத்துகிறது,
நாம் எல்லோரும் சராசரியாகக் கடந்து போகிற சாமானியர்கள் அனைவருக்குமே ஒரு வாழ்க்கையிருக்கிறது. அந்த மனிதர்களின் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை சிறப்பே! பெற்றோரின் பிரிவு, ஆதரவற்ற நிலை என்று ஆரம்பிக்கும் காட்சிகள் மனதை வருடிகிறது, எதிர்பாராத திருப்பங்கள்தான் வாழ்க்கை என்று ஆரம்பத்தில் எழுத்தாகப் போட்டுள்ள இயக்குநர் சீனு ராமசாமி, அதன் படி படத்தை கொண்டு வந்துள்ளார்,
திருநங்கைகள் நலன், உருவக் கேலிக்கு எதிர்ப்பு, போருக்கு எதிரான நிலைப்பாடு என அனைத்து உணர்வையும் இந்தப் படம் கொடுத்தது.
மொத்தத்தில் இந்த ” கோழிப்பண்ணை செல்லதுரை ” நம் அன்றாட பார்க்கும் மனிதர்களின் ஒரு பிம்பம்.
Rating 3/5