
காதல் என்பது பொதுவுடமை
இயக்குனர் – ஜெயபிரகாஷ்
நடிகர்கள் – லிஜோமொல் ஜோஸ், ரோஹிணி , வினித்
இசை – கண்ணன் நாராயணன்
தயாரிப்பு – மேன் கைன்ட் புரொடக்ஷன் – ஜியோ பேபி
ஒரு பெண் தன் தாயிடம் தான் ஒருவர் மீது காதல் கொண்டுள்ளதாக சொல்கிறார், தாய் மகளின் விருப்பத்தை கேட்டுக் கொண்டு சரி என கூறி , காதலனை வீட்டுக்கு அழைத்து வர சொல்கிறார். அம்மாவின் விருப்பப்படி லிஜோமோல் ஜோஸ் தனது காதல் துணையை அழைத்து வருகிறார். அவரை பார்த்ததும் தாய் அதிர்ச்சியில் உரைந்துப் போகிறார். காரணம், லிஜோமோல் ஜோஸ் காதலிப்பது ஒரு ஆண் அல்ல, அவரைப் போன்ற ஒரு பெண். இதன் பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை .நகர்ப்புறங்களில் தற்போது அதிகரித்து வரும் ஓரினசேர்க்கை காதலை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்,
நாயகி லிஜோமோல் ஜோஸ் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார், தனக்கு ஏற்பட்டிருக்கும் தன் பாலினச் சேர்க்கை உணர்வை தனது தாய்க்கும், சமூகத்திற்கும் எப்படி புரிய வைக்கிறார், என்பதை தன் பாலினச் சேர்க்கை மீதான சமூகத்தின் பார்வை, கேள்விகள், அதற்கு அவர்களின் உணர்வுப்பூர்வமான விளக்கங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் சொல்கிறார். சவாலான கதாபாத்திரத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஆணுக்கு பெண் மீது வருவது போல் தான் தனது காதலும், என்று தனது பெற்றோரிடம் வாதிடுவதும், சிறிது நேர இடைவெளி கிடைத்தாலும், தனது காதல் துணையை அரவணைத்து அன்பு செலுத்துவதும், என்று கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
இந்தப்படத்தில் ரோகிணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பெண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் .சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் அதைப்பற்றி விவாதித்து அல்லது கருத்து தெரிவித்து வந்த ஒரு விசயம் நம் வீட்டுக்குள் நடக்கும் போது, முற்போக்கு சிந்தனைவாதியாக இருந்தாலும், இப்படியும் நடக்குமா? என்ற கோணத்தில் தன் மகளின் உணர்வை புரிந்துக் கொள்ள முடியாமல் தடுமாறும் தாயாக நடித்திருக்கும் ரோகிணி தனது அனுபவமான நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.
நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் வினித், எதையும் மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில், வழக்கமான உரையாடல்கள் மற்றும் கேள்விகள் மூலம் தனது பெண்ணுடன் விவாதம் செய்து, பெற்றோர்களின் மனநிலையை பிரதிபலித்திருக்கிறார். லிஜோமோல் ஜோஸின் காதல் துணையாக நடித்திருக்கும் அனுஷா, தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லாத முகமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்து ரசிகர்கள் மனதில் தனது முகத்தை பதிய வைத்துவிடுகிறார்.
வீட்டுப் பணிப்பெண் வேடத்தில் நடித்திருக்கும் தீபா, தனது வெகுளித்தனம் மூலம், தன் பாலினச் சேர்க்கை மீதான வெகுஜன மக்களின் பார்வை மற்றும் சந்தேகங்களை முன் வைத்திருக்கிறார். லிஜோமோல் ஜோஸை காதலித்து பிறகு அவரைப் பற்றி தெரிந்துக் கொண்டு அவருக்கு நெருங்கிய தோழனாக பயணிக்கும் கலேஷ், தன் பாலினச் சேர்க்கையாளர்களை இந்த சமூகம் புரிந்துக் கொண்டு அவர்களையும் சக மனிதர்களாக பார்க்க வேண்டும், என்பதை அழுத்தமாக பதிவு செய்யும் கதாபாத்திரத்தில் பக்குவமாக நடித்திருக்கிறார்.
கண்ணன் நாராயணின் இசை, ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு, டேனி சார்லஸின் படத்தொகுப்பு, ஆறுசாமியின் கலை, உமாதேவியின் பாடல் வரிகள் அனைத்தும் கதைக்களத்தில் இருந்து சிறிதளவும் விளாகமல் பயணித்திருக்கிறது.
இந்தப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், தன் பாலினச் சேர்க்கை என்பது உடல் தேவை அல்ல உணரவேண்டிய மனிதர்களின் உணர்ச்சி, என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். அதே சமயம், தன் பாலினச் சேர்க்கையாளர்கள் மீதான சமூகத்தின் பார்வை மற்றும் கேள்விகளை வெளிப்படையாக முன்வைத்திருப்பவர், அதற்கான பதில்களையும் நேரடியாகவும், நேர்மையாகவும் சொல்லி ஆரோக்கியமான விவாதமாக திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்.
மொத்த படமும் ஒரு வீட்டுக்குள் நடக்கும் விவாதம் என்றாலும், அதை முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சித்திருப்பவர் மிக நாகரீகமான காட்சிகள் மற்றும் கருத்துகள் மூலம் தன் பாலினச் சேர்க்கையாளர்களின் மனங்களையும், உணர்வுகளையும் மக்களுக்கு புரிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘காதல் என்பது பொதுவுடமை’ நல்ல விளக்கம்.
Rating 3.3/5