பாலன் படம் எப்படி இருக்கு?

‘பாலன்’ திரைப்பட விமர்சனம்

வாழ்க்கையின் கொடூரமான அனுபவங்களால் உடைந்துபோன ஒரு தாயின் மனநிலையையும், தாயைத் தேடி அலைபாயும் ஒரு மகனின் உணர்வுகளையும் நெகிழ்ச்சியுடன் சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘பாலன்’.

சிறை வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஃபர்சானா பலதிங்கல், சிறையிலேயே குழந்தை பெற்றெடுக்கிறார். பின்னர் விடுதலையாகும் அவர், கடந்த காலத்தின் காயங்களால் யாரையும் நம்ப முடியாத மனநிலையில் தனது மகனுடன் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்கிறார். இறுதியில் தனியாக வாழும் ஒரு மூதாட்டியை பராமரிக்கும் வேலை கிடைத்ததால் அங்கேயே நிரந்தரமாக தங்க முடிவு செய்கிறார்.

தன் மகனை பள்ளியில் சேர்த்து அமைதியான வாழ்க்கையை தொடங்கினாலும், கடந்த காலத்தின் நிழல்கள் அவரை தொடர்ந்து துரத்துகின்றன. பள்ளியில் இருந்து வரும் மகனை ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருக்கச் சொல்லும் அவர், “நான் கண்டிப்பாக வந்து அழைத்துச் செல்வேன்” என்று உறுதியளிக்கிறார். ஆனால் எதிர்பாராத ஒரு சம்பவம் தாய்-மகனை பிரித்து விடுகிறது.

அதன்பிறகு நடைபெறும் தாய்-மகனின் உணர்வுப்பூர்வமான தேடலும், மீண்டும் அவர்கள் இணைந்தார்களா என்ற கேள்விக்கான பதிலும் தான் ‘பாலன்’ திரைப்படத்தின் மையக்கரு.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஃபர்சானா பலதிங்கல், தனது கண்களின் மூலம் பல உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார். வலி, பயம், குற்ற உணர்வு, அன்பு என பல பரிமாணங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கும் அவரது நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது.

சிறுவன் பாலனாக நடித்திருக்கும் ஆதிசேஷன் கே.ஆர்., தனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதிக வசனங்கள் இல்லாமலேயே முகபாவனைகள் மற்றும் கண்களின் மூலம் கதாபாத்திரத்தின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கிறார்.

வளர்ந்த பாலனாக நடித்திருக்கும் ஜினனின் நடிப்பும் கதைக்கு வலு சேர்க்கிறது. தாயைத் தேடும் அவரது பயணம் உணர்ச்சிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜீன் பவுல் லால் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸின் திரை இருப்பு படத்திற்கு கூடுதல் வலிமையை வழங்குகிறது. மேலும் கிரிஷ் ஏ.டி உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழுமையான நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் அமைதியான காட்சிகளையும் இயற்கை சூழல்களையும் அழகாக பதிவு செய்திருக்கிறார். பல இடங்களில் லொக்கேஷன்களே ஒரு தனி கதாபாத்திரமாக உணர வைக்கின்றன.

சுஷின் ஷாமின் பின்னணி இசை கதையின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கிறது. குறிப்பாக பதற்றம் மற்றும் நெகிழ்ச்சி நிறைந்த தருணங்களில் அவரது இசை காட்சிகளின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்துகிறது.

படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன், மெதுவான கதையையும் சுவாரஸ்யமாக நகர்த்தி பார்வையாளர்களின் கவனத்தை இறுதி வரை தக்க வைத்திருக்கிறார்.

எளிமையான கதையை ஆழமான உணர்வுகளுடன் சொல்லியிருக்கும் எழுத்தாளர் ஜித்து மாதவன், தாய்-மகன் உறவின் வலிமையையும் பிரிவின் வேதனையையும் மனதை தொடும் வகையில் பதிவு செய்திருக்கிறார்.

‘மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கியிருக்கும் இப்படம், துவக்கம் முதல் இறுதி வரை உணர்வுகளும் பரபரப்பும் கலந்த பயணமாக நகர்கிறது. யூகிக்க முடியாத திருப்பங்களும், எதார்த்தமான கதாபாத்திரங்களும் படத்தை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.

மொத்தத்தில், ‘பாலன்’ ஒரு மனதை நெகிழ வைக்கும் தரமான திரைப்படம்.

ரேட்டிங் : 4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *