
சட்டென்று மாறுது வானிலை’ திரைப்பட விமர்சனம்
காதல், காமெடி, திரில்லர், குடும்ப உணர்வுகள் என அனைத்து அம்சங்களையும் கலக்கலாக கலந்து, ரசிகர்களை முழுக்க முழுக்க எண்டர்டெயின் செய்யும் படமாக வந்திருக்கிறது ‘சட்டென்று மாறுது வானிலை’.
ஐடி ஊழியரான ஜெய், மீனாட்சியை பார்த்தவுடன் காதலிக்கிறார். மறுநாளே காதலை சொல்லி திருமணம் செய்து கொள்கிறார். புதிதாக தொடங்கும் அவர்களின் வாழ்க்கை, தேன்நிலவுக்காக கொடைக்கானல் சென்ற பிறகு எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கிறது. கருடா ராம் நடத்தும் சொகுசு விடுதியில் தங்கும் இந்த தம்பதிக்கு அங்கு பெரிய சிக்கல் உருவாகிறது. அதே சமயம், மீனாட்சியின் அமைச்சர் தந்தை, ஜெயை பிரித்து மகளுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்.
இந்நிலையில் திடீரென மீனாட்சி காணாமல் போவது கதையை பரபரப்பின் உச்சிக்குக் கொண்டு செல்கிறது. அனைத்து குற்றச்சாட்டுகளும் ஜெய் மீது விழ, அவர் இந்த சிக்கல்களில் இருந்து எப்படி வெளியேறுகிறார் என்பதே படத்தின் சுவாரஸ்யமான திரைக்கதை.
ஜெய் வழக்கம்போல தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார். குறிப்பாக விஜய் ரசிகர் என்ற அடையாளத்துடன் அவர் வெளிப்படுத்தும் மாஸ் பாணி, பல காட்சிகளில் ரசிகர்களிடம் கைதட்டலை பெறுகிறது. காதல், உணர்ச்சி, பதட்டம் என பல பரிமாணங்களில் அவர் நல்ல முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜன் அழகிலும், நடிப்பிலும் திரையை ஒளிரச் செய்கிறார். தந்தை மீதான கோபம், கணவர் மீதான காதல், மனஉளைச்சல் போன்ற உணர்ச்சிகளை மிகவும் இயல்பாக வெளிப்படுத்தி பாராட்டைப் பெறுகிறார்.
யோகி பாபு தனது டைமிங் வசனங்களால் படத்திற்கு லைட்டான காமெடி டச் கொடுக்கிறார். அவருடன் வரும் ஆதித்யா கதிரின் காமெடி காட்சிகளும் சில இடங்களில் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
கருடா ராம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். சத்யன், ஸ்ரீமன், சரவண சுப்பையா உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் கதைக்கு தேவையான வலிமையை கொடுத்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கொடைக்கானலின் அழகை கலர்புல்லாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் தரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் அனைத்தும் இளமையான உற்சாகத்துடன் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் காட்சிகளின் விறுவிறுப்பை உயர்த்துகிறது.
இயக்குநர் பாபு விஜய், இணைய உலகில் மனிதர்களின் தனியுரிமை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைக் கமர்ஷியல் பாணியில் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். காதல், சஸ்பென்ஸ், குடும்பம், ஆக்ஷன் என அனைத்தையும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் தொகுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சட்டென்று மாறுது வானிலை’ — காதல், திரில்லர் கலந்த முழுமையான கமர்ஷியல் எண்டர்டெய்னர். ஜெய் ரசிகர்களுக்கும், குடும்ப ரசிகர்களுக்கும் பிடிக்கும் படமாக அமைந்திருக்கிறது.
⭐️ ரேட்டிங் : 3.2 / 5