எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்

‘எக்ஸாம்’ இணையத் தொடர் விமர்சனம்

அரசு தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளை மையமாக வைத்து, பரபரப்பான திரைக்கதையுடன் சமூக அக்கறையை இணைத்து உருவாகியிருக்கும் இணையத் தொடர் தான் ‘எக்ஸாம்’.

போலீஸ் டி.எஸ்.பியான அதிதி பாலன், பணி மாறுதலால் புதிய இடத்திற்கு செல்லும் வழியிலேயே மர்மமான சூழலில் கடத்தப்படுகிறார். அவரை கடத்தி அடைத்து வைக்கும் துஷாரா விஜயன், அதிதி பாலனின் அடையாளத்தில் டி.எஸ்.பியாக பொறுப்பேற்று, அங்கு நடைபெற இருக்கும் அரசு தேர்வு மோசடியை தடுக்க முயற்சிக்கிறார்.

ஆனால், இந்த மோசடி வெறும் சிலரின் வேலை அல்ல, அதிகாரத்தின் உச்சியில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத சக்தியின் திட்டமிடல் என்பது அவருக்கு தெரிய வரும்போது கதை மேலும் சுவாரஸ்யமாக மாறுகிறது. காவல்துறை அதிகாரிகள் முதல் அரசு அலுவலர்கள் வரை பலரும் அறியாமலேயே அந்த சதியின் கருவிகளாக பயன்படுத்தப்படுகிறார்கள்.

இந்த மோசடியின் பின்னால் இருப்பது யார்?, அதன் நோக்கம் என்ன?, அதை துஷாரா விஜயன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாரா? என்பதையே விறுவிறுப்பாக சொல்லுகிறது ‘எக்ஸாம்’.

அரசு வேலை என்பது சாதாரண சம்பளம் பெறும் ஒரு தொழில் மட்டுமல்ல, நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையை பணமும் அதிகாரமும் கொண்டவர்கள் எப்படி திருடி விடுகிறார்கள் என்பதை மிக உணர்வுப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சற்குணம்.

சமூக பிரச்சனைகளை பேசும் கதைகளும் இணையத் தொடராக விறுவிறுப்பாக சொல்ல முடியும் என்பதை இந்த தொடரின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். உண்மை சம்பவங்களின் தாக்கம் பல காட்சிகளில் தெளிவாக தெரிகிறது. அரசு இயந்திரத்தின் கோளாறுகளை எந்த தயக்கமும் இன்றி நேரடியாக சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

துஷாரா விஜயன் தனது இயல்பான மற்றும் அழுத்தமான நடிப்பின் மூலம் முழு தொடரையும் தாங்கிச் செல்கிறார். அரசு பணிக்காக கனவு காணும் சாதாரண மக்களின் ஏமாற்றம், கோபம், வேதனை அனைத்தையும் கண்களிலேயே வெளிப்படுத்தியிருக்கிறார். அதிதி பாலனும் தனது கதாபாத்திரத்தை மிகவும் நிதானமாக கையாள்கிறார். அதிகாரமும் பணமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற மனநிலையை அவரது நடிப்பு துல்லியமாக பிரதிபலிக்கிறது.

சப் இன்ஸ்பெக்டர் செழியனாக நடித்திருக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், குறைந்த காட்சிகளிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றும் அவரது கதாபாத்திரம், கிளைமாக்ஸில் முக்கிய திருப்பமாக மாறுவது திரைக்கதைக்கு பலம் சேர்க்கிறது.

மலைப்பகுதிகளை மையமாக கொண்டு அமைக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. ஒளிப்பதிவு காட்சிகளுக்கு இயல்பான அழகை கொடுத்திருக்கிறது. பின்னணி இசை தேவையான இடங்களில் மட்டுமே உணர்ச்சியை தூண்டி, கதையின் சீரியஸான தன்மையை காப்பாற்றுகிறது. படத்தொகுப்பும் எந்த இடத்திலும் சோர்வை ஏற்படுத்தாமல் கதையை நகர்த்துகிறது.

தமிழ்நாட்டில் நடந்த அரசு தேர்வு மோசடிகளை நினைவூட்டும் வகையில், அதன் பின்னணியை மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சற்குணம். இப்படிப்பட்ட மோசடிகள் எப்படி நடக்கிறது, யார் மூலம் நடக்கிறது என்பதை நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருப்பது தொடரின் மிகப்பெரிய பலம்.

முதல் சில அத்தியாயங்கள் ஏற்படுத்தும் பரபரப்பை அடுத்த அத்தியாயங்கள் முழுமையாக தக்க வைத்திருக்கவில்லை என்றாலும், சொல்லப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனையை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் கூறியிருப்பதால் அந்த குறை பெரியதாக தெரியவில்லை.

மொத்தத்தில், ‘எக்ஸாம்’ வெறும் கிரைம் திரில்லர் அல்ல; அரசு வேலைக்காக போராடும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வலியை பேசும் சமூக அக்கறையுள்ள இணையத் தொடர்.
அதனால், ‘எக்ஸாம்’ குழுவினர் இந்த தேர்வில் சிறந்த மதிப்பெண்ணுடன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ரேட்டிங் : 3.5 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *