
’ஜென்டில்வுமன்’
இயக்குனர் – ஜோஷ்வா சேதுராமன்
நடிகர்கள் – லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா
இசை – கோவிந்த் வசந்தா
தயாரிப்பு – கோமளா ஹரி பிக்சர்ஸ் – கோமளா ஹரி , ஹரி பாஸ்கரன்
சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு தம்பதியர் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர், தன் மீது கணவர் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என்று நினைக்கும் போது, கணவரின் செல்போன் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்துக் கொள்கிறார். இதனால் கடும் கோபமடையும் அப்பெண் கணவரை கொலை செய்து விடுகிறார். இரத்த வெள்ளத்தில் கணவர் இறந்ததை பார்த்து சற்றும் கலங்காதவர், கணவர் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்குகிறார். இதற்கிடையே, காதலனை காணவில்லை என்று அவரது கள்ளக்காதலி போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்கும் போலீசார், அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை கண்டுபிடித்தார்களா? லிஜோமோல் ஜோஸ் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தாரா? இல்லையா ? என்பதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தும் வகையில் சொல்வதே ‘ஜென்டில்வுமன்’.
இந்தப் படம் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தன் கணவர் செய்த தவறை அறிந்து சாதாரண பெண் போல் கலங்கினாலும், அடுத்த கணமே சற்றும் எதிர்ப்பார்க்காத ஒரு விசயத்தை செய்து பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார். கணவரை கொலை செய்துவிட்டு எந்தவிதமான பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஒவ்வொரு நாட்களையும் கடந்து செல்வது படம் பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதை தனது நடிப்பு மூலம் மிக சாதாரணமாக கையாண்டு கைதட்டல் பெறுகிறார்.
நாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், கடவுள் பக்தி, நெற்றியில் பட்டை என்று நல்ல பிள்ளையாக இருந்தாலும், பெண்கள் விசயத்தில், ” சேட்டை மன்னனாக வலம் வந்திருக்கிறார். குறைவான காட்சிகள் என்றாலும் திரைக்கதையோட்டத்தில் நிறைவாக பயணித்திருக்கிறார். படம் முழுக்க அவரது இருப்பை நம் உணர முடிகிறது,
இதில் மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருப்பதோடு, பாதுகாப்புக்காக ஆண்களை சார்ந்திருக்கும் பெண்களை பிரதிபலிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். லிஜோமோல் ஜோஸின் தங்கையாக நடித்திருக்கும் தாரணி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, போலீஸ் இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் வைரபாலன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, தனது சொந்த ஊர் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. போலீஸ் உதவி ஆணையராக நடித்திருக்கும் சுதேஷ், காவல்துறையின் உயர் அதிகாரி வேடத்திற்கு அளவு எடுத்து தைத்தது போல் கச்சிதமாக பொருந்துவதோடு, காவல்துறையில் நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து மிரட்டியிருக்கிறார். ஸ்டண்ட் இயக்கத்திற்கு விடுமுறை அளித்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தினால் வில்லன் மற்றும் குணச்சித்திர வாய்ப்புகள் குவியும் என்பது உறுதி.
படத்தில் பெரும்பாலான காட்சிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் இருந்தாலும் ஒளிப்பதிவாளர் சா.காத்தவராயன் நம்மை திரையை விட்டு விலக விடாமல் கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை பார்வையாளர்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிரார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் உள்ளது. பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.
இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன் உண்மை குற்ற சம்பவம் ஒன்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார், பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களை ஆண்கள் தங்களுக்கு கீழே தான் வைத்திருக்கிறார்கள், உள்ளிட்ட வசனங்கள் மூலம் பெண்ணியம் பேசினாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் ஜானரோடு சேர்த்து கமர்ஷியலாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன், தான் சொல்ல வந்ததை ஜனரஞ்சகமாக சொல்லி ரசிக்க வைத்தாலும், அவரது பெண் கதாபாத்திரங்கள் போடும் திட்டம், சினிமாத்தனமாகவும், நம்பும்படியாகவும் இல்லாதது படத்தின் பலத்தை சற்று பலவீனப்படுத்தும் வகையில் இருக்கிறது.
மொத்தத்தில், ’ஜென்டில்வுமன்’ ஒரு நல்ல சஸ்பென்ஸ் அனுபவம் .
3/5