
‘4 இடியட்ஸ்’ திரைப்பட விமர்சனம்
ஒரே ஒரு கடற்கரை பங்களா… அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கோடி ரூபாய் பணம்… அதை கொள்ளையடிக்க திட்டமிடும் நான்கு திருடர்கள்… ஆனால், அவர்கள் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்ளும் ஒரு மர்மமான காவலாளி! இந்த காமெடி மற்றும் மர்ம கலந்த கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் திரைப்படம் தான் ‘4 இடியட்ஸ்’.
மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. அந்த பணத்தை கொள்ளையடிக்க புகழ், கும்கி அஷ்வின், திடியன் மற்றும் இந்திரன் ஆகிய நான்கு பேரும் திட்டம் தீட்டுகிறார்கள்.
திட்டப்படி பங்களாவுக்குள் நுழைய முயற்சிக்கும் அவர்கள், அங்கு காவலாளியாக இருக்கும் ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், போலீசிடம் ஒப்படைக்காமல், அந்த நான்கு பேருடனும் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை ரவி மரியா ஏற்படுத்துகிறார். வேறு வழியில்லாமல் அந்த ஒப்பந்தத்திற்கு நான்கு பேரும் சம்மதிக்கிறார்கள்.
இதற்கிடையே, பங்களாவின் உரிமையாளர் வின்சென்ட் அசோகன் மற்றும் காவலாளி ரவி மரியா ஆகியோரின் பின்னணியில் ஒரு பெரிய மர்மம் இருப்பது நான்கு திருடர்களுக்கும் தெரிய வருகிறது. அந்த உண்மையை அறிந்ததும் அச்சத்தில் உறையும் அவர்கள், தங்களுக்கு எதுவும் தெரியாதது போல் நடித்து அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள்.
அவர்கள் தப்பித்தார்களா? அந்த பங்களாவுக்குள் மறைந்திருக்கும் ரகசியம் என்ன? வின்சென்ட் அசோகன் மற்றும் ரவி மரியாவின் உண்மையான பின்னணி என்ன? என்பதற்கு காமெடி கலந்து பதில் சொல்கிறது ‘4 இடியட்ஸ்’.
கதையின் மையக் கதாபாத்திரமாக நடித்திருக்கும் புகழிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது காமெடியை தான். ஆனால், படத்தில் இடம்பெறும் பல காமெடி காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு சிரிப்பை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, கதாபாத்திரத்தின் நடிப்பு மற்றும் காமெடி டைமிங் பல இடங்களில் இயல்பாக அமையாமல் போகிறது.
புகழுடன் இணைந்து நடித்திருக்கும் கும்கி அஷ்வின், திடியன் மற்றும் இந்திரன் ஆகியோருக்கும் காமெடி காட்சிகள் அதிகம் கிடைத்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ரவி மரியா தனது வழக்கமான பாணியில் சில காட்சிகளில் ரசிக்க வைக்க முயற்சிக்கிறார்.
வின்சென்ட் அசோகன் மட்டும் தனது கதாபாத்திரத்தின் தன்மையை புரிந்து கொண்டு, தனக்கு கொடுக்கப்பட்ட பணியை குறையின்றி செய்திருக்கிறார்.
படத்தில் இடம்பெறும் பிரக்யா நயன் கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சில காட்சிகள் மற்றும் கவர்ச்சி பாடல் கமர்ஷியல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.
யு.கே. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. கடற்கரை பங்களா மற்றும் அதைச் சுற்றியுள்ள காட்சிகளை கலர்புல்லாகவும், கமர்ஷியல் படத்திற்கு தேவையான கவர்ச்சியுடனும் பதிவு செய்திருக்கிறார்.
சுபாஷ் மணிரத்னத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் தன்மையுடன் அமைந்துள்ளன.
எழுதி இயக்கியிருக்கும் சஜோ சுந்தர் முருகேசன், ஒரே முக்கியமான லொக்கேஷனை மையமாக வைத்து முழு கதையையும் நகர்த்த முயற்சித்திருக்கிறார். குறிப்பாக, கதையில் உள்ள மர்மம் மற்றும் பிரக்யா நயன் கதாபாத்திரத்தை பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது.
ஆனால், படத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் காமெடி பல இடங்களில் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யாதது பெரிய குறையாக மாறுகிறது. முதன்மை கதாபாத்திரங்களின் ஓவர் ஆக்டிங் மற்றும் செயற்கையான காமெடி காட்சிகள் கதையின் வேகத்தை குறைத்து விடுகின்றன.
கமர்ஷியல் திரைப்படத்திற்கு தேவையான அம்சங்கள், கவர்ச்சி, பாடல்கள், மர்மம் என அனைத்தும் இருந்தாலும், காமெடி மற்றும் திரைக்கதையை இன்னும் சுவாரஸ்யமாகவும் இயல்பாகவும் இணைத்திருந்தால் ‘4 இடியட்ஸ்’ ஒரு முழுமையான காமெடி என்டர்டெய்னராக உருவாகியிருக்கும்.
மொத்தத்தில், ‘4 இடியட்ஸ்’ சிரிக்க வைக்க முயற்சிக்கும் ஒரு கமர்ஷியல் காமெடி திரைப்படம். ஆனால், அந்த முயற்சி பல இடங்களில் சிரிப்பாக வெடிக்காமல், ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது.