டூரிஸ்ட் ஃபேமிலி படம் எப்படி இருக்கு?

டூரிஸ்ட் ஃபேமிலி

இயக்கம் – அபிஷன் ஜீவிந்த்
நடிகர்கள் – சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய் ஷங்கர் , கமலேஷ்
இசை – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – மில்லியன் டாலர் ஸ்டுடியோ – பசிலியன் நசீரத், மகேஷ் ராஜ் பசீலன்

பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையில் மிகவும் வறுமையில் வாடி வரும் சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரம் வழியாக திருட்டுத்தனமாக தப்பித்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகின்றனர். ஆரம்பத்திலேயே அவர்கள் போலீஸ் ஒருவரிடம் மாட்டிக் கொள்கின்றனர். ஆனால், அந்த குடும்பத்தின் இயல்பை பார்த்த அந்த காவல் அதிகாரி அவர்களை தப்பித்துப் போக விடுகிறார். அங்கிருந்து சென்னைக்கு வந்து ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சகஜமான வாழ்க்கையை வாழலாம் என நினைத்தவர்களுக்கு ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வர அதற்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இருக்கா? இல்லையா? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை .

அயோத்தி படத்துக்குப் பிறகு மீண்டும் மனிதத் தன்மையை நிலைநாட்டும் ஒரு கதையை சசிகுமார் தேர்வு செய்து நடித்த இடத்திலேயே பாராட்டுக்களை பெறுகிறார். வில்லியாகவும் சிறு சிறு கேமியோ ரோலிலும் நடித்து வரும் நடிகை சிம்ரனுக்கு இந்த படம் சிறப்பான தரமான சம்பவம் என்றே சொல்லலாம்.

சசிகுமார், சிம்ரனை தாண்டி அவர்களின் மகன்களாக நடித்திருக்கும் மிதுன் ஜெய் சங்கர் மற்றும் கமலேஷ் என இருவரது நடிப்பும் வேறலெவல். அதிலும், ஜோசப் குருவிலா என சொல்லி அதகளப்படுத்தும் சிறுவன் கமலேஷின் நடிப்பு தான் ஒட்டுமொத்த திரையரங்கையும் அடிக்கடி சிரிப்பலையில் ஆழ்த்துகிறது. படத்தை கடைசி வரை போரடிக்காமல் என்டர்டெயின் பண்ணிக் கொண்டே செல்கிறது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இன்னொரு ஹீரோவாகவே தனது முதல் பாடலில் இருந்தே கதையையும் கதையின் தன்மையையும் ரசிகர்களுக்குள் அழகாக கடத்தி விடுகிறார். பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் பக்காவாக ஸ்கோர் செய்துள்ளார். ரமேஷ் திலக்கின் நடிப்பும் அப்ளாஸ் அள்ளுகிறது. அரவிந்த் விஸ்வநாதனின் அழகான ஒளிப்பதிவு மற்றும் பரத் விக்ரமின் எடிட்டிங்கும் கூடுதல் பலம்.

இலங்கை வாழ் மனிதர்களின் வாழ்வியல் குறித்த பல கதைகளை நாம் கேட்டிருப்போம் அது போல இது ஒன்றுதான் ஆனால் , போர் அழுகை என காட்டாமல் சாதாரண மனிதனின் ஆசை பற்றி எடுத்துரைத்துள்ளார் இயக்குனர். மனிதம் என்றைக்கும் ‘மரித்து போகாது’ என்பதை அழகாக ஆணித்தரமாக இயக்குநர் தனது ஷார்ப்பான வசனங்களாலும் திறமையான திரைக்கதையாலும் கையாண்டு எடுத்துள்ள விதம் தான் படத்திற்கு பெரிய பிளஸ்.

மொத்தத்தில் இந்த ” டூரிஸ்ட் ஃபேமிலி ” க்கு கண்டிப்பாக ஒரு விசிட் போடலாம் .

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *