
‘நிழற்குடை’
இயக்குனர் – சிவ ஆறுமுகம்
நடிகர்கள் – தேவையாணி, விஜித், இளவரசு, நீலிமா
இசை – நரேன் பாலகுமார்
தயாரிப்பு – ஜோதி சிவா
ஒரு தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக் கொள்ள ஒருவரை வேலைக்கு சேர்க்கிறார்கள். அந்தப் பெண்ணின் அன்பு மற்றும் அக்கறையால் குழந்தையும் அவரிடம் பாசத்தோடு இருக்கிறாள். இதற்கிடையே, அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் அந்த தம்பதிக்கு விசா கிடைத்துவிடுகிறது. இதனால், குழந்தையை பிரிவதை நினைத்து அப்பெண் வருத்தமடைகிறார். இதற்கிடையே, குழந்தை திடீரென்று காணாமல் போக, தங்கள் அமெரிக்கா பயணத்தை தடுக்க இதை செய்திருக்கலாம் என்று நினைக்கும் குழந்தையின் பெற்றோர், சிலர் மீது புகார் அளிக்கிறார்கள். அதன்படி, அவர்களிடம் போலீஸ் விசாரித்தும் குழைந்தை கிடைக்காத நிலையில், குழந்தையை கண்டுபிடித்தார்களா?, வேலைப்பெண்ணை விட்டு பிரிய மறுக்கும் குழந்தையின் நிலை என்ன? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வதே ‘நிழற்குடை’.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவயானி, தற்போதைய இளம் தலைமுறை தம்பதியினருக்கு பாடம் எடுக்கும் வகையில் நடித்திருக்கிறார். குழந்தை மீது அவர் காட்டும் அன்பும், அக்கறையும் பணம் சம்பாதிப்பது, வசதியாக வாழ்வது என்றே பயணிக்கும் பெற்றோர்களுகு சவுக்கடியாக உள்ளது.
இளம் தம்பதியாக நடித்திருக்கும் விஜித் மற்றும் கண்மணி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். இவர்களது குழந்தையாக நடித்திருக்கும் சிறுமி ஜி.வி.அஹானா அஸ்னி மற்றும் நிஹாரிகா இருவரது நடிப்பும் சிறப்பு. ராஜ்கபூர், இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா ராணி ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
வித்தியாசமான லுக்கில் மிரட்டும் தர்ஷன் சிவாவின் கதாபாத்திரமும், அதை சார்ந்த காட்சிகளும், படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்திருக்கிறது. அக்ஷரா, கவிதா ரவி, மனோஜ் குமார், பிரவீன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்தின் உணர்வுகளை ரசிகர்களிடத்தில் எளிதியில் கடத்திவிடுகிறது. ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவின் கேமரா, மனிதர்களின் உணர்வுகளையும், கதாபாத்திரங்களின் நடிப்பையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஹிமேஷ்பாலாவின் வசனம், வெளிநாட்டு மோகத்தில் இருப்பவர்கள் மற்றும் பணம் தான் வாழ்க்கை என்று நினைப்பவர்களின் மனங்களை மாற்றும் மந்திரக்கோலாக பயணித்திருக்கிறது. தற்போதைய காலக்கட்டத்தில் இப்படி ஒரு கதையை இயக்குநர் சிவா ஆறுமுகம் யோசித்திருப்பது பெரும் ஆச்சரியம் என்றாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு இதுபோன்ற கதைகள் மிக அவசியம் என்பதை மறுக்க முடியாது.
முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும் இத்தகைய சூழலில், குழந்தை வளர்ப்பிலும் கவனம் செலுத்தாத இந்த தலைமுறையினருக்கு பாடம் சொல்லும்படி படம் பயணித்தாலும், அவ்வபோது திரைக்கதையில் சில திருப்பங்களை வைத்து படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குநர் சிவா ஆறுமுகம்.
மொத்தத்தில், ‘நிழற்குடை’ இந்தக்கால குழந்தைகளின் தாய் தந்தையர் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
Rating 3.3/5