ஜோரா கைய தட்டுங்க படம் எப்படி இருக்கு?

ஜோரா கைய தட்டுங்க

இயக்குனர் – வினீஷ் மில்லினியம்
நடிகர்கள் – யோகி பாபு , ஷாந்தி ராவ் , ஹர்ஷ் பேரடி
இசை – எஸ் என் அருணகிரி – ஜிதின் கே ரோஷன்
தயாரிப்பு – வாமா என்டர்டெய்ன்மென்ட் – ஜாகிர் அலி

பிரபலமான மேஜிக் கலைஞரின் மகன் தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் பிரகாசிக்க முடியாமல் போவதோடு, ரவுடி கும்பலால் தனது கையை இழந்து மேஜிக் கலையையும் தொடர முடியாமல் போகிறது. இதற்கிடையே, அவரின் கையை வெட்டிய ரவுடி கும்பல், அவருக்கு நெருக்கமான சிறுமியை கொலை செய்து விடுகிறது. இதனால் தனது மேஜிக் திறமையை வைத்து ரவுடி கும்பலை பழிவாங்க திட்டமிடுபவர், அவர்களை எப்படி பழி தீர்க்கிறார், அதன் மூலம் அவருக்கு எப்படிப்பட்ட சிக்கல்கள் வருகிறது, அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார், என்பதை பரபரப்பில்லாமல் சொல்வதே ‘ஜோரா கைய தட்டுங்க’.

இதில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் யோகி பாபு சிறப்பான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார், பல இடங்களில் அவரது காமெடி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது, நாயகியாக நடித்திருக்கும் சாந்தி ராவுக்கு பெரிய கதாபாத்திரம் ஒன்றுமில்லை என்றாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்,

மேலும் போலீஸாக நடித்திருக்கும் ஹரிஷ் பெராடி, கல்கி, வசந்தி, மணிமாறன், சாகிர் அலி, அருவி பாலா, ஸ்ரீதர் கோவிந்தராஜ், மூர், மேனகா, வரிஜகாஷன், நைரா நிஹர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.என்.அருணகிரி இசையமைத்துள்ளார் அவரது இசையில் பாடல்களும், ஜித்தின் கே.ரோஷனின் பின்னணி இசையும் படத்தின் திரையோட்டத்திற்கு பெரிதும் உதவியுள்ளது. ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டின் பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

வினீஷ் மில்லினியம் மற்றும் பிரகாஷ்.கே, பழிவாங்கும் கதையை காமெடியாகவும், கமர்ஷியலாகவும் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். யோகி பாபுவை காமெடியனாக மட்டுமே காட்டாமல் கொஞ்சம் சீரியஸான கதாபாத்திரமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் வினீஷ் மில்லினியம், திரைக்கதையில் பல திருப்பங்களை வைத்து, மெதுவாக நகர்த்தி ரசிக்க செய்துள்ளார்.மேலும் தொடர் கொலைகள் செய்யும் யோகி பாபு, தனது மேஜிக் மூலம் அதில் இருந்து தப்பிப்பது போன்றவை ரசிக்கும்படி இருக்கிறது.

மொத்தத்தில், இந்த ‘ஜோரா கைய தட்டுங்க’ நிச்சயம் ரசிகர்களை கை தட்ட செய்யும்.

Rating 2.8/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *