
ஸ்கூல்
இயக்கம் – ஆர் கே வித்யாசரண்
நடிகர்கள் – யோகி பாபு , பூமிகா சாவ்லா , கே எஸ் ரவிகுமார், நிழல்கள் ரவி
இசை – இளையராஜா
தயாரிப்பு – குவாண்டம் ஃபில்ம் ஃபேக்டரி – ஆர் கே வித்யாசரண்
இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் , மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால், இந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளவதோடு, சாதி, மத பிரிவினையோடு வெற்றி மட்டுமே வாழ்க்கை என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதற்கிடையே, அந்த புத்தகத்தை மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்கு தெரியாத உருவம் என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார் அதை ஏற்க மறுப்பதோடு, அதன் பின்னணியை கண்டுபிடிக்க விசாரணை மேற்கொள்கிறார். ஆனால், அங்கு நடக்கும் மர்ம சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.இதற்கிடையே, பள்ளியில் இருக்கும் அமானுஷய சக்திகள் குறித்து சாமியார் ஒருவர் கண்டுபிடிப்பதோடு, அந்த அமானுஷயங்களை வரவைத்து எதற்காக இப்படி செய்கிறார்கள், என்று கேட்க முயற்சிக்கிறார். இப்படி ஒரு குழப்பமான சூழ்நிலையில் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களான இருவர் அந்த பள்ளிக்கு மீண்டும் வர, அவர்களை பார்த்ததும் அந்த அமானுஷ்ய சக்திகள் அமைதியாகிறது.அவர்கள் யார்? அவர்கள் எதற்காக இப்படி செய்கிறார்கள்? என்பதை, வெற்றி, தோல்வியை தாண்டியும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, என்ற அறிவுரையை மாணவர்களுக்கு கூறும் விதமாக சொல்வதே ‘ஸ்கூல்’.
இந்தப் படத்தில் ஆசிரியர் கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு, காமெடியை அளவாக கையாண்டிருந்தாலும், குணச்சித்திர நடிகராக கவனம் ஈர்த்திருக்கிறார். பொறுமையாக நடித்து கதாபாத்திரத்திற்கான வலுவை சேர்த்துள்ளார்,
பூமிகா சாவ்லாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், வெற்றி மற்றும் தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொள்ளாமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்ற அறிவுரையை அழுத்தமாக பதிவு செய்வதற்கு அவர் துணையாக நின்றிருக்கிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் பகவதி பெருமாள், உதவி தலைமை ஆசிரியராக நடித்திருக்கும் சாம்ஸ், மந்திரவாதி மஸ்தான் வேடத்தில் நடித்திருக்கும் நிழல்கள் ரவி, உலகநாத சுவாமியாக நடித்திருக்கும் இயக்குநர் ஆர்.கே.வித்யாதரன், ஆசிரியைகள் வேடத்தில் நடித்திருக்கும் இரண்டு நடிகைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வேடத்தில் நடித்திருப்பவர்கள் என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை மற்றும் வரிகளில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கம் ரகமாக இருக்கிறது. பின்னணி படத்தின் நகர்வுக்கு உதவியுள்ளது, ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜ், பள்ளி வளாகத்திலேயே முழு படத்தையும் காட்சிப்படுத்தியிருந்தாலும், நம்மை களைப்படையச்செய்யவில்லை.
இப்படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.கே வித்யாதரன், அறிவு போதிக்கும் பள்ளியில் அமானுஷ்யம் என்ற மூடநம்பிக்கையை வளர்க்கும் கதையை சொல்லியிருந்தாலும், பின்னணியில் மாணவர்களுக்கு சிறப்பான அறிவுரை வழங்கியிருக்கிறார்.வெற்றி, தோல்வியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பயணிக்காமல், வாழ்க்கையை ஈசியாக எடுத்துக் கொண்டு பயணித்தால், படிக்கவில்லை என்றாலும் சாதிக்க முடியும், என்ற நம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்திருக்கிறார்.படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்து மற்றும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலான வசனங்கள் பாராட்டும்படி இருக்கிறது.
மொத்தத்தில், ‘ஸ்கூல்’ மாணவர்களுக்கான அறிவுரைப்படம்.
Rating 3/5