
’டி.என்.ஏ’
இயக்குனர் – நெல்சன் வெங்கடேசன்
நடிகர்கள் – அதர்வா , நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் , ரமேஷ் திலக்
இசை – ஜிப்ரான், வைபோதா
தயாரிப்பு – ஒலிம்பியா மூவிஸ் – ஜெயந்தி அம்பேத்கர் ,
ஒரு பெண் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சில மணி நேரங்களில் கடத்தப்பட்டு வேறு ஒரு குழந்தை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. இதை அறிந்து கொள்ளும் அந்த பெண், இது தனது குழந்தை இல்லை என்று கூறுகிறார். ஆனால், மருத்துவமனை ஆவணங்கள் அனைத்தும் அது அந்த பெண்ணின் குழந்தை தான் என்பதை உறுதிப்படுத்த அவள் மட்டும் தனது குழந்தை இல்லை, என்பதில் உறுதியாக இருக்கிறார். மனைவி சொல்வதன் பின்னணியை கண்டுபிடிக்க களத்தில் இறங்கும் கணவன், தனது குழந்தையை மீட்டாரா? குழந்தை கடத்தலின் பின்னணி என்ன? என்பது தான் மீதிக்கதை.
இந்தப் படத்தில் அதர்வா இது வரை நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார், காதல் தோல்வியால் போதைக்கு அடியமையான இளைஞராக அறிமுகமாகி, பிறகு பொறுப்பான கணவராக தனது கதாபாத்திரத்தை அதர்வா சிறப்பாக கையாண்டிருப்பதோடு, நடிப்பிலும் முதிர்ச்சி அடைந்திருப்பது பல காட்சிகளில் தெரிகிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன், கண்களினாலேயே நடித்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்துவிட்டு பறிதவிக்கும் காட்சிகளில் மிரட்டலாக நடித்திருக்கிறார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலின் கதாபாத்திரமும், அவரது நடிப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது. அதர்வாவின் அப்பாவாக நடித்திருக்கும் சேத்தன், நிமிஷா சஜயனின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி சந்திரசேகர், ரமேஷ் திலக், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் செல்வராஜ், சுப்பிரமணிய சிவா ஆகியோர் தங்களது பங்களிப்பை சரியாக கொடுத்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவின் சைவி, சஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரது பாடல்களும், ஜிப்ரானின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பார்த்திபனின் ஒளிப்பதிவு நேர்த்தி. இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகளில் அவரது கேமரா மாயாஜாலம் செய்திருக்கிறது.
குழந்தை கடத்தல் கதையை வித்தியாசமாண கோணத்தில் அணுகியிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், போலீஸ் விசாரணை, குழந்தை கடத்தல் நெட்வொர்க் போன்றவற்றை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். காதல் ஆக்சன் சஸ்பென்ஸ் என ஒரு நல்ல கமர்ஷியல் கலவையாக இந்தப் படம் கவர்ந்துள்ளது,
மொத்தத்தில், ‘டி.என்.ஏ’ அதர்வாக்கு நல்ல பெயரை வாங்கி தரும் .
Rating 3.7/5