
’சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’
இயக்கம் – விக்ரம் ராஜேஷ்வர்
நடிகர்கள் – வைபவ், அதுல்யா, லிவிங்ஸ்டன்
இசை – டி இமான்
தயாரிப்பு – பி டி ஜி யுனிவர்சல் – பாபி பாலசந்திரன்
ஒரு திருடன் மற்றும் அவரது நண்பர் இருவரையும் ரூ.2 கோடி பணத்திற்காக ஒரு தாதா துரத்துகிறார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒருவரிடம் தஞ்சம் அடைகின்றனர் , அவர்கள் அனைவரும் சேர்ந்து வங்கி ஒன்றை கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். இவர்களின் திட்டம் வெற்றி பெற்றதா? தாதாவிடம் இருந்து தப்பித்தாரா? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.
காமெடி கதாபாத்திரத்திரங்களை சர்வசாதாரணமாக கையாளும் வைபவ், இதிலும் அப்படியே செய்திருக்கிறார். சாதாரணமாக அவர் பேசுவது கூட சிரிக்க வைக்கிறது. வசன உச்சரிப்பு, உடல் மொழி என்று மிக சாதாரணமாக நடித்தாலும், படம் முழுவதும் வைபவ் சிரிக்க வைக்கிறார்.
இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் மணிகண்ட ராஜேஷ், பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று கடினமாக உழைத்திருக்கிறார். ஆனால், வைபவ் அளவுக்கு அவருக்கு டைமிங் இல்லாததால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை.
மறதி மொட்டை ராஜேந்திரன், குடிகாரன் சுனில், காது கேளாத, ஜான் விஜய், சைரன் சத்தம் கேட்டால் போலீஸாக மாறிவிடும் ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், சிஹான் ஹூசைனி என அனைவரும் வழக்கம் போல் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள், கொஞ்சம் போரடிக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவிக்கு பெரிய வேலை இல்லை. ஒரு சில காட்சிகளில் தலைகாட்டுகிறார்.
டி.இமானின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது . பின்னணி இசை சுமார். ஒளிப்பதிவாளர் டிஜோ டாமி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விக்ரம் ராஜேஸ்வர், பழைய கதையை காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் லாஜிக் பார்க்காமல் பார்த்தால் நிச்சயம் சிரிக்கலாம். பல இடங்களில் குலுங்கி குலுங்கி சிரிக்க முடிகிறது.
மொத்தத்தில், ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ காமெடி விருந்து
Rating 3/5