
’மாயக்கூத்து’
இயக்குனர் – ஏ ஆர் ராகவேந்திரா
நடிகர்கள் – நாகராஜ் கண்ணன் , டெல்லி கணேஷ், மு ராமசாமி
இசை – அஞ்சனா ராஜகோபாலன்
தயாரிப்பு – ராகுல் மூவி மேக்கர்ஸ் கே ராகுல் தேவா , பிரசாத் ராமசந்திரன்
பிரபல எழுத்தாளரான நாயகன் தான் எழுதும் கதையில், தாதா, வீட்டு வேலை செய்யும் ஏழை பெண், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவி, நடுத்தர குடும்ப பெண் என நான்கு முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். இந்த கதாபாத்திரங்களின் பின்னணி மற்றும் நியாயங்களை இவரது மனம் சொல்லும் யோசனையின் அடிப்படையில் உருவாக்குகிறார். ஆனால், அவரது யோசனைகள் தவறு என்று அவரது நண்பர்கள் எடுத்து கூறுகிறார்கள். அதை ஏற்றுக்கொள்ள அவரது எழுத்தாளர் ஈகோ மறுக்கிறது. ஒரு நாள் இவர் கதையில் உருவாக்கிய நான்கு கதாபாத்திரங்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் தங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்கிறார்கள். எங்கே சென்றாலும் எழுத்தாளரை தொடர்கிறார்கள். இது உண்மையா இல்லையா என்று குழம்பும் நாயகன், தன் கதை மூலமாகவே இந்த சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார். அதன் பிறகு நடப்பவைகளை சுவாரஸ்யமான திரைக்கதையோடு சொல்வது தான் ‘மாயக்கூத்து’.
கதையின் நாயகனாக எழுத்தாளர் வாசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகராஜன் கண்ணன், தலைக்கணம் கொண்ட ஒரு எழுத்தாளராக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
பதிப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டெல்லி கணேஷ், தனது அனுபவமான மற்றும் எதார்த்தமான நடிப்பு மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார். ரேகா குமனன், காயத்ரி, பேராசிரியர் மு.ராமசாமி, தீனா, முருகன் கோவிந்தசாமி, பிரகதீஸ்வரன், ஐஸ்வர்யா ரகுபதி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதையையும், தங்களது கதாபாத்திர தன்மையையும் முழுமையாக உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன், தனது கேமராவை கதாபாத்திரங்களில் ஒன்றாக பயணிக்க வைத்திருக்கிறார். கதை மாந்தர்களின் இயல்பு தன்மையையும், எதார்த்தமான நடிப்பையும் எவ்வித கலப்படம் இன்றி காட்சிப்படுத்தி பாராட்டுப் பெறுகிறார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் அஞ்சனா ராஜகோபாலன், முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கும் இசையை கொடுத்திருக்கிறார்.
கதையில் உள்ள கதாபாத்திரங்கள் நேரில் தோன்றினால் என்ன நடக்கும், என்ற வித்தியாசமான மற்றும் புதிய முயற்சியை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஏ.ஆர்.ராகவேந்திரா, படத்துடன் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார். புதுமுக நடிகர்கள், அறிமுக தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் கதையாசிரியர்கள் என்று முழுக்க முழுக்க புதியவர்களாக இருந்தாலும், அவர்களது புதுமையான முயற்சியும், அதை திரை மொழியில் சொன்ன விதமும் ஒரு சிறந்த படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
மொத்தத்தில், ‘மாயக்கூத்து’ சினிமா ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான விருந்து .
Rating 3.3/5