மதகஜராஜா வெற்றி
நன்றி தெரிவித்த விஷால்
2025ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக இன்று 25வது நாள் மக்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறும் நேரம் இது.
“மதகஜராஜா” திரைப்படம் பெரும் உழைப்பாலும் சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு இதே பொங்கல் திருநாளில் வெளிவர தயாராக இருந்த சூழ்நிலையில் தவிர்க்கமுடியாத சில காரணங்களாலும் பட நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து பட குழுவினர்களுக்கு உண்மையான காரணங்கள் என்னவென்று தெரியாமலே அன்று படம் வெளிவர முடியாமல் போனது. அதனை தொடந்து நானும், அன்பிற்கினிய சகோதரர் இயக்குநர் திரு.சுந்தர்.C அவர்களும் சோர்வடையாமல் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுத்து வந்தோம்.
இந்த 2025ஆம் வருடம் “மதகஜராஜா” திரைப்படத்தை வெளியிடுவதற்கான முயற்சியில் எங்களுக்கு வலிமையான முதல் தூணாக இருந்தவர் அன்பிற்கினிய அண்ணன் திருப்பூர் திரு.சுப்பிரமணியம் அவர்கள் இத்திரைப்படத்தை முதலில் அவர் பார்த்த உடன் அதன் மீது உள்ள முழு நம்பிக்கையில் பொங்கல் திருவிழா திருநாளில் வெளியிடுவதற்கு முன்னெடுத்து முழு ஆதரவையும் வழங்கி வழி நடத்தி எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்.
அடுத்து வலிமையான இரண்டாவது தூணாக இருந்தவர் அன்பிற்கினிய சகோதரர் இயக்குனர் திரு.சுந்தர்.C அவரும், நானும் எப்போது பேசினாலும், மதகஜராஜா எப்போது திரையில் வெளிவந்தாலும் நிச்சயம் மக்களிடம் பெரும் வரவேற்பு அடையும் என்பதே எங்களின் அதீத நம்பிக்கையாக இருந்தது.
இயக்குனர் திரு.சுந்தர்.C அவர்கள் வைத்த வேண்டுகோளினை ஏற்று ஒரு மணி நேரத்திற்குள் படத்தை வெளியிடுவதற்குத் தேவையான முழு தொகையும் வழங்கி “மதகஜராஜா” திரைப்படத்தை வெளியாவதற்கு விநியோகம் செய்ய முன் வந்து ஆதரவு வழங்கிய மிக முக்கியமான வலிமையான மூன்றாவது தூண் என் அன்பிற்கினிய சகோதரர் மற்றும் நண்பர் திரு.ஏ.சி.சண்முகம் அவர்கள்.
சிறப்பு மிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஆரம்ப காலங்களில் இருந்தே எங்களுக்கு உறுதுணையாக இருந்து நிதி உதவி வழங்கிய திரு.ஏ.சி.சண்முகம் அவர்களின் வாழ்த்துக்களுடன் இப்போது தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் நிறைவு பெரும் நிலையில் உள்ளது என்பதனை இந்த மகிழ்ச்சியான நேரத்தில் தெவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
“மதகஜராஜா” திரைப்படம் வெளியாவதற்கு பல நாட்கள் இரவு பகல் என்றும் பாராமல் அயராது உழைத்து உறுதுணையாக இருந்தவர் அன்பிற்கினிய தோழி அதிதி அவர்கள்.
இப்பேர்ப்பட்ட நல் உள்ளங்களின் உறுதுணையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி பொங்கல் திருவிழா திருநாளில் “மதகஜராஜா” திரைப்படம் வெளியானது.
நான்காவது வலிமையான தூண், என் தெய்வங்களாகிய எம் மக்கள்,
12ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் மக்களிடம் பிரசித்தி பெறுவதை போன்று அதே எதிர்பார்ப்புடன் 12ஆண்டுகள் கடந்து வெளியான “மதகஜராஜா” திரைப்படமும் மக்களின் பேராதரவு பெற்று பல கோடி வசூலையும் கடந்து மக்கள் குடுபங்களுடன் திரையரங்குகளுக்கு வந்து கொண்டாடிய
2025 ஆண்டின் முதல் வெற்றி பெற்ற இப்படம், மாபெரும் வசூல் படைத்த திரைப்படமாக திரையுலகில் கால் பதித்தது.
இப்படத்தின் முதல் அறிவிப்பு முதல் படத்தின் பிரத்தியோக காட்சி முடிந்தது வரை ஏகோபித்த வரவேற்பு கொடுத்த எனது அருமை பத்திரிகை நண்பர்கள் கொடுத்த ஊக்கம் மிகப்பெரிய பலமாக இருந்தது.
சினிமா வரலாற்றில் ஒரு நல்ல திரைப்படம் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும், அத்திரைப்படம் வெளியிட முடியாமல் பல ஆண்டுகள் கடந்து எப்போது திரையில் வந்தாலும் மக்களின் பேராதரவு உண்டு என்பதற்கு “மதகஜராஜா” திரைப்படம் ஒரு சான்று.
அதே போன்று இன்னும் வெளிவராமல் இருக்கும் பல படங்களுக்கு “மதகஜராஜா” திரைப்படம் முன்மாதிரியாகவும் அவர்களுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும் வகையில் இருந்து வருகிறது.
என்னை ஒரு பாடகராக ஏற்று #MyDearLoveru பாடலுக்கு பேராதரவு வழங்கியமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு இந்நாள் மிகவும் முக்கியமான மறக்க முடியாத நாளாக இருக்கிறது.
பல தடைகளை தாண்டி நான்கு வலிமையான தூண்கள் உதவியுடன் “மதகஜராஜா” திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்று பல கோடி வசூல் சாதனை படைத்தது போல், பல தடைகளை தாண்டி தெலுங்கிலும் வெளியாகி வெற்றி பாதையில் பயணிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை இத்திரைப்படத்திற்கு உறுதுணையாக இருந்த அண்ணன் திருப்பூர் திரு.சுப்பிரமணியம், நண்பர் திரு.ஏ.சி.சண்முகம், சகோதரர் இயக்குனர் திரு.சுந்தர்.C, என் தெய்வங்களாகிய எம்மக்கள், ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
“மதகஜராஜா” திரைப்படம் போன்று உங்களை மகிழ்விக்கும் நல்ல திரைப்படங்களை வழங்கிடுவேன் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
நன்றி,
வணக்கம்,
உங்களவன் விஷால்