
விடாமுயற்சி
இயக்கம் – மகிழ் திருமேனி
நடிகர்கள் – அஜித் குமார், த்ரிஷா, ஆரவ் , அர்ஜுன் , ரெஜினா
இசை – அனிருத்
தயாரிப்பு – லைகா புரொடக்ஷன் – சுபாஷ்கரன்
இந்தியாவை சேர்ந்த ஒருவர் அஜர்பைஜான் நாட்டில் மனைவியுடன் வசித்து வருகிறார். 12 வருடம் தம்பதியாக வாழ்ந்த இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருக்கும் நிலையில், இறுதியாக ஒருமுறை இருவரும் காரில் நெடுந்தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்களது கார் பழுதுடைந்து விடுகிறது. அந்த வழியாக வரும் லாரியின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி உதவி செய்வதாக கூறி நாயகியை மட்டும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். கார் சரியானதும் அவர் தன் மனைவியை தேடிச் செல்ல, அவர் கடத்தப்பட்டிருக்கும் உண்மை தெரிய வருகிறது. யார்? எதற்காக கடத்தினார்கள் என்பது பற்றி எதுவும் தெரியாத நிலையில், மனைவியை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதை பல திருப்பங்களோடு வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘விடாமுயற்சி’.
இந்தப் படத்தில் அஜித் தான் ஒரு உச்ச நடிகர் என்ற இமேஜை ஒதுக்கி வைத்துவிட்டு, கதைக்கான நாயகனாக களம் இறங்கியுள்ளார், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். மனைவியின் மனதை புரிந்துக்கொண்டு அவரது உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பதும், அதே மனைவி கடத்தப்பட்டவுடன் காப்பாற்றுவதற்காக துடிப்பது, என அனைத்து இடங்களிலும் உணர்வுப்பூர்வமாக நடித்து அசத்தியிருக்கிறார். நடனம் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை மிக சாதாரணமாக கையாண்டாலும், தனது ஸ்டைலான அசைவுகள் மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்துவிடுகிறார்.
நாயகி திரிஷா, அழகாக இருக்கிறார். கணவனை பிரிவது, தனக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதை கணவனிடம் தெரிவிப்பது, என்று பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை மிக நாகரீகமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கிறார்.
அர்ஜூன் கதாபாத்திரம் எதிர்பார்த்தபடி வில்லனாக வந்தாலும், படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது. ரெஜினா கசாண்ட்ராவும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். ஆரவ், ரம்யா சுப்பிரமணியம், ரவி ராகவேந்திரா, நிகில் சஜித், சஞ்சய் கணேஷ் சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்திற்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறார். அஜர்பைஜான் சாலைகளின் ஆபத்தையும், அழகையும் ஒருசேர காட்சிப்படுத்தியிருப்பவர், வெறிச்சோடிய சாலைகளின் பயணத்தை பதற்றத்துடன் பார்க்க வைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பெரிய தூணாக இசை உள்ளது, அனிருத்தின் இசையில் பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்தை அடுத்த கட்ட தளத்திற்கு எடுத்து சென்றுள்ளது,
இந்தப் படத்தில் அஜித்தை மாஸாக காட்டவில்லை என்றாலும், ஸ்டைலிஷாக காட்டியிருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனி, சாதாரண கருவை பல திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் படத்தை சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார். திரிஷா கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை ரசிகர்கள் யூகித்தாலும், அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அஜித்தின் போராட்டம் மற்றும் முயற்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறது.
ஒரே இடத்தில் கதை நிற்பது போல் இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், அஜித் – திரிஷா ஜோடியின் காதல், கல்யாணம், பிறகு அவர்களது பிரிவு, அதற்கான காரணம் ஆகியவற்றை பெண்ணின் கண்ணோட்டம் மூலம் சொல்லி, இது ரெகுலரான படம் இல்லை, என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி.
மொத்தத்தில், ‘விடாமுயற்சி’ மிகசிறந்த முயற்சி.
Rating 3/5