லக்கி பாஸ்கர்’ படம் எப்படி இருக்கு?

Rating 3.8/5

’லக்கி பாஸ்கர்’

இயக்கம் – வெங்கட் அட்லூரி
நடிகர்கள் – துல்கர் சல்மான், மீனாக்ஷி சவுத்ரி
இசை – ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பு – சித்தாரா என்டர்டெயின்மென்ட்

வங்கியில் காசாளராக வேலை பார்க்கும் ஒருவன் பொருளாதார பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார். பணம் இல்லாத காரணத்தால் அவரும், அவரது குடும்பமும் பல இடங்களில் அவமானங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால், நேர்மை, உழைப்பு ஆகியவற்றை கைவிட்டுவிட்டு, தவறு செய்தாலும் பரவாயில்லை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அவரது இத்தகைய முடிவு அவரை எங்கு அழைத்துச் செல்கிறது, அவர் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்பதை சொல்வது தான் ‘லக்கி பாஸ்கர்’.

பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத் தலைவராக நடித்திருக்கும் துல்கர் சல்மான், பொருளாதார பிரச்சனையில் சிக்கித் தவித்தாலும்ம், அதை எளிதாக எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பது, வசதி வந்த உடன், அதை தன் வாழ்க்கை முறையில் மட்டும் இன்றி உடல் மொழியிலும் நேர்த்தியாக வெளிப்படுத்துவது என்று நடிப்பில் அசத்தியிருக்கிறார். தனக்கானது கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில், வங்கி மேளாளரிடம் கோபப்பட்டு, பிறகு அவரிடமே அழுது கெஞ்சும் காட்சியிலும் சரி, அந்த சூழலை அடுத்த சில நிமிடங்களில் மறந்துவிட்டு சாதாரண நிலைக்கு திரும்பும் போது சரி, மொத்த படத்தையும் தனது நடிப்பு மூலம் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

துல்கர் சல்மானின் மனைவியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி, முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராம்கி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவான நடிப்பு மூலம் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது. 1989 முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் நடக்கும் கதைக்கான காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி, தனது கேமரா மூலம் நம்மை 30 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்.

வங்கி மோசடி மற்றும் பங்குச் சந்தை மோசடி ஆகியவற்றின் பின்னணியில் இந்திய நடுத்தர குடும்ப மக்களின் வாழ்க்கைப் போராட்டம் மற்றும் மனநிலையை மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.

சிறு சிறு மோசடிகளை வெற்றிகரமாக செய்யும் துல்கர் சல்மான், பெரிய விசயத்தை செய்ய முயற்சித்து அதில் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலையை கையாளும் முறை, தான் சம்பாதித்த மொத்த பணமும் தன்னிடம் இருந்து பறிக்கப்படும் போது, அந்த சூழலை சமாளிக்கும் திட்டம் ஆகியவை படத்திற்கு சற்று சுவாரஸ்யம் சேர்த்தாலும், என்ன நடக்கப் போகிறது, என்று பார்வையாளர்கள் யூகிக்கும்படி அடுத்தடுத்த காட்சிகள் நகர்வதால் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குறிப்பாக, வங்கியில் நடைபெறும் மிகப்பெரிய மோசடிகள் மற்றும் பங்குச் சந்தை மோசடி ஆகியவை எளிய மக்களுக்கு புரியாதபடி இருப்பது படத்திற்கு பலவீனம்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிக சாதாரணமாக திரைக்கதை பயணித்தாலும் துல்கர் சல்மானின் நடிப்பு, படத்தின் வசனங்கள், நாயகனின் திட்டமிடுதல் ஆகியவை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

மொத்தத்தில், ‘லக்கி பாஸ்கர்’ அனைவருக்குமான படம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *