’மேக்ஸ்’
இயக்குனர் – விஜய் கார்திகேயா
நடிகர்கள் – சுதிப், வரலக்ஷ்மி சரத்குமார் , சம்யுக்தா
இசை – அஜநீஷ் லோக்னாத்
தயாரிப்பு – வி கிரியேஷன் & சுதீப் கிறியேஷன்
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், சஸ்பெண்ட் முடிந்து மீண்டும் இன்ஸ்பெக்டராக பதவி ஏற்க இருக்கும் நாளுக்கு முந்தைய இரவில், பெண் காவலர்களிடம் அநாகரிகமாக நடந்துக் கொள்ளும் இரண்டு இளைஞர்களை அடித்து துவைத்து லாக்கப்பில் அடைக்கிறார். காலை பதவி ஏற்றவுடன் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் போடுவதாக சொல்லிவிட்டு செல்ல, லாக்கப்பில் இருக்கும் இளைஞர்கள் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள். இறந்த இளைஞர்கள் ஒரு மாநில அரசையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்த அமைச்சர்களின் மகன்கள் என்பதால், சம்மந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஆபத்தில் இருந்து அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் நாயகன், இறந்த இளைஞர்களின் உடல்களை அங்கிருந்து யாருக்கும் தெரியாமல் அப்புறப்படுத்தவும் முடிவு செய்கிறார். ஆனால், இளைஞர்கள் காவல் நிலையத்தில் இருக்கும் தகவல் அறிந்து அமைச்சரின் அடியாட்கள் குழு குழுவாக காவல் நிலையத்தை தாக்க, சுதீப் அவர்களை எப்படி சமாளித்து தனது பணியை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார் என்பதை விறுவிறுப்பு நிறைந்த வேகத்துடனும், புத்திசாலித்தனமான திருப்பங்களுடனும் சொல்வதே ‘மேக்ஸ்’.
அர்ஜுன் மஹாக்ஷய் அல்லது மேக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் மாஸ் மற்றும் அதிரடியில் மிரட்டும் சுதீப், காவலர்களை காப்பாற்றுவதற்காக வகுக்கும் யூகங்கள் அனைத்தும் சிறப்பு. எந்த இடத்தில் மாஸ் காட்ட வேண்டும், எந்த இடத்தில் அளவாக நடிக்க வேண்டும் என்பதை மிக கவனமுடன் செய்திருப்பவர், ஆக்ஷன் காட்சிகளில் சரவெடியாக வெடிக்கிறார். சுதீப்பின் திரை பயணத்தில் மிக முக்கியமான ஆக்ஷன் படமாக இந்த படம் அமையும் என்பது உறுதி.
வில்லன்களுக்காக உளவு பார்க்கும் கிரைம் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திர வடிவமைப்பும், அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பும் படத்தின் திருப்பங்களுக்கு கைகொடுத்திருக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் சுனில், பெண் காவலர்களாக நடித்திருக்கும் சம்யுக்தா ஹார்னட், சுக்ருத்வாக்லே, அமைச்சராக நடித்திருக்கும் சரத் லோகிதஸ்வா, வம்சி கிருஷ்ணா, ஆடுகளம் நரேன், இளவரசு, சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் உக்ரம் மஞ்சு என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும், ஏதோ ஒரு திருப்பங்கள் மூலம் ரசிகர்களை கவர்வதோடு, திரைக்கதையில் முக்கிய இடம் பிடித்து விடுகிறார்கள்.
இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத் இசையில் பின்னணி இசையின் சத்தம் சற்று அதிகமாக இருந்தாலும், மாஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் வீரியத்தை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சேகர் சந்திரா ஒரு இரவில் நடக்கும் ஆக்ஷன் மாஸ் கதையில் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான விசயங்களை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் விஜய் கார்த்திகேயா, முன்னணி ஹீரோவுக்கான மாஸ் ஆக்ஷன் கதையை ஒரு இரவில் நடப்பது போல் வடிவமைத்திருந்தாலும், அதில் உணர்வுப்பூர்வமான சில விசயங்களையும் சேர்த்து படத்தை ரசிக்க வைக்கிறார். படம் தொடங்கிய 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒவ்வொரு காட்சிகளையும் திருப்பங்கள் நிறைந்தவையாக நகர்த்திச் செல்லும் இயக்குநர், அடுத்தது என்ன நடக்கும்? என்ற பதற்றத்தை பார்வையாளர்களிடம் கடத்தியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மிகப்பெரிய கூட்டத்தை தனி ஆளாக எதிர்த்து நின்று போராடும் நாயகனை சித்தரித்த விதம், அவரது அதிரடி ஆக்ஷன் மற்றும் புத்திசாலித்தனமான யோசனைகள் மூலம் தன்னை நம்பியிருப்பவர்களை காப்பாற்றும் விதம் என்று எந்த ஒரு இடத்திலும் சிறு தொய்வில்லாமல் திரைக்கதையை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க வைத்திருப்பதோடு, இறுதியில் எதிர்பார்க்காத திருப்பத்துடன், உணர்வுப்பூர்வமான முறையில் படத்தை முடித்திருக்கும் இயக்குநர் விஜய் கார்த்திகேயாவை தென்னிந்திய சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் என்பது உறுதி.
மொத்தத்தில் “மேக்ஸ்” ஒரு கமர்ஷியல் விருந்து .
Rating 3.5/5