மிஸ் யூ
இயக்கம் – என். ராஜசேகர்
நடிகர்கள் – சித்தார்த் , ஆஷிகா ரங்கனாத் , கருணாகரன் , பாலசரவணன்
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு – செவன் மைல்ஸ் பர் செகண்ட் – சாமுவேல் மேத்யு
விபத்து மூலம் தலையில் அடிபட்டு கடைசி இரண்டு வருடங்களின் நினைவுகளை இழந்துவிடும் நாயகன் , ஒரு பெண்ணைக் கண்டதும் காதல் கொள்கிறார். அந்தப் பெண் அவரது காதலை நிராகித்து விட, உடனே தன் பெற்றோர் மற்றும் நண்பர்களிடம் அந்தப் பெண்ணின் புகைப்படத்தை காட்டி அவரை காதலிப்பதாக சொல்கிறார். அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைவதோடு, குடும்பத்தினர்கள் அந்த இருவரும் ஏற்கனவே காதலித்து பிரிந்துள்ளதையும் விபத்தினால் அது மறந்து விட்டதாகவும் உறவைப் பற்றிய உண்மையை அவரிடம் சொல்கிறார்கள். அந்த உண்மை என்ன?, அவனது காதலை அந்தப்பெண் ஏற்றாரா? இல்லையா? என்பதை அளவான காதலோடு சொல்வதே ‘மிஸ் யூ’.
கல்லூரி மாணவர் போல் இளமையாக இருக்கும் சித்தார்த்துக்கு காதல் கதை கச்சிதமாக பொருந்துகிறது. காதல் கதையாக இருந்தாலும், நாயகியை துரத்தி துரத்தி காதலிக்காமல் மிக நாகரீகமாக காதல் காட்சிகளை கையாண்டிருக்கும் சித்தார்த், தனது முதிர்ச்சியான நடிப்பு மூலம் கதைக்கு பலம் சேர்த்திருந்தாலும், அவ்வபோது தன்னை சாக்லெட் பாய் இல்லை என்பதை நிரூபிக்க ஆக்ஷனிலும் அசத்துகிறார்.
இவங்கள தமிழ் சினிமா எப்படி மிஸ் பண்ணியது? என்று நினைக்க வைக்கும் அளவுக்கு அழகிலும், நடிப்பிலும் அசத்தும் ஆஷிகா ரங்கநாத், தனது அசால்டான நடிப்பு மற்றும் கண்கள் மூலமாகவே காதலை கடத்தி பார்வையாளர்களின் மனதில் இறங்கி விடுகிறார்.
நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் பாலசரவணன், லொள்ளு சபா மாறன், கருணாகரன் ஆகியோர் காமெடி ஏரியாவை தங்கள் கட்டிப்பாட்டில் வைத்திருந்தாலும், கருணாகரன் மட்டுமே பளிச்சிடுகிறார். அவரது டைமிங் மற்றும் வசன உச்சரிப்பு, அந்த காட்சி முடிந்த பிறகும் நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது. அவரது காட்சிகளை சற்று அதிகரித்திருந்தால் திரையரங்கில் சிரிப்பு சத்தமும் அதிகரித்திருக்கும். சஷ்திகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகஷ், ரமா, அனுபமா குமார், சரத் லோகிதஸ்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் மெலோடி, குத்துப்பாட்டு என அனைத்து பாடல்களும் கேட்கும் விதம். பின்னணி இசையிலும் குறையில்லை. ஆனால், பாடல்கள் படம் முடிந்த பிறகு நினைவில் இருந்து நீங்கிவிடும் வகையில் இருப்பது காதல் கதைக்கு பலவீனம். ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும், படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும் காதல் கதையை கமர்ஷியல் படமாக நகர்த்தி சென்றிருக்கிறது.
இயக்குநர் என்.ராஜசேகருடன் இணைந்து திரைக்கதை அமைத்திருக்கும் எழுத்தாளர் டான் அசோக், காதலை விட கமர்ஷியல் அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அவரது எளிமையான வசனங்கள் கூட காதல் காட்சிகள் பார்வையாளர்களை எந்தவிதத்திலும் பாதிக்காதவாறு சாதாரணமாக பயணிக்க வைக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் என்.ராஜசேகர், காதல் கதையாக இருந்தாலும், நாயகன் சித்தார்த்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கிறார். அதனால், சித்தார்த்தின் காதலை விட, அவரது ஆக்ஷன் காட்சிகள், அரசியல்வாதி உடனான மோதல், நண்பர்கள் உடனான விவாதம் ஆகியவை படத்தை அதிகம் ஆட்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு காதலில் மூழ்கடிக்கப் போகிறார்கள், என்ற எதிர்பார்ப்போடு வரும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமளிக்கும் வகையில் படம் இருந்தாலும், நாயகியின் திரை இருப்பு அந்த ஏமாற்றத்தை போக்கி படத்தை ரசிக்க வைக்கிறது. ஆஷிகா மற்றும் சித்தார்த் ஆகியோரது காட்சிகளை அதிகப்படுத்தி, அவர்களது காதலை அழுத்தமாக பதிவு செய்திருந்தால் நிச்சயம் படம் பார்வையாளர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.
மொத்தத்தில், ‘மிஸ் யூ’ மிஸ் பண்ண வேண்டாம்
Rating 3.3/5