![](https://cinemalee.com/wp-content/uploads/2024/12/IMG-20241211-WA0112-682x1024.jpg)
“அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !
மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள “அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
திரை பிரபலங்கள் வெளியிட்ட “அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக்!
MD Pictures வழங்கும் , துரை மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள ”அறிவான்” திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஆவலைத்தூண்டும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியே இன்று வெளியிட்டனர்.
ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக்குப் பின்னால் இருப்பது யார்? அந்த கொலைகளுக்கு காரணம் என்ன என்பதை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பது தான் இந்த “அறிவான்” படத்தின் கதை.
ஒவ்வொரு நொடியும் மனதை அதிர வைக்கும் திருப்பங்களுடன், பரபரவென பறக்கும் திரைக்கதையில், ஒரு புதுமையான இன்வஸ்டிகேசன் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அருண் பிரசாத்.
இப்படத்தில் இளம் நடிகர் ஆனந்த் நாக் போலீஸ் அதிகாரியாக முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிக்பாஸ் புகழ் ஜனனி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மிக முக்கிய வேடங்களில் பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கௌரி சங்கர், சரத் ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் நெய்வேலியில் 65 நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த திரில்லர் திரைப்படத்தை, MD Pictures சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிப்பாளர் துரை மகாதேவன் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழாவிடம் பணியாற்றிய கார்த்திக் ராம் எரா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் யஷ்வந்த் ஒளிப்பதிவு செய்ய, சத்யா எடிட்டிங் செய்கிறார். சூர்யா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். A ராஜா மக்கள் தொடர்பு பணிகளை கவனிக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இம்மாதம் படத்தின் இசை வெளியீட்டை நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது. விரைவில் படத்தை திரைக்குக் கொண்டுவரவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.