நந்தன்
இயக்கம் – இரா சரவணன்
நடிகர்கள் – சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி
இசை – ஜிப்ரான்
தயாரிப்பு – இரா சரவணன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடி பகுதியில் பல வருடங்களாக தலைவராக இருந்து வரும் ஒருவர் இந்த முறை தலைவர் போட்டிக்கு நிற்க முடியாதபடி அரசின் அறிவிப்பு வருகிறது. அதன் காரணமாக தனது வீட்டில் வேலை செய்து வரும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த நந்தன் என்பவரை தலைவர் போட்டிக்கு நிற்க வைக்கிறார். அதன் பின்னர், நந்தன் தலைவரானாரா? அல்லது அவருக்கு என்ன நடந்தது
என்பது தான் இந்த படத்தின் கதை.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தையும் வலியையும் ஒவ்வொரு இயக்குநர்களும் ஓங்கி உரைத்து வருகின்றனர். சிலர், அதை பீரியட் படமாகவும், 20 வருடத்திற்கு முன் நடந்த கதையாகவும் காட்டியிருப்பார்கள். ஆனால், இரா. சரவணன் இப்போதும் அது நடப்பதாக துணிச்சலுடன் எடுத்து சொன்ன விதம் சிறப்பாக உள்ளது.
சசிகுமார் இதுவரை சுந்தர பாண்டியன், குட்டிப்புலி என முத்தையா இயக்கத்தில் ஜமின்தார் போன்றே நடித்து வந்த நிலையில், அந்த சாயலை தார தப்பட்ட படத்திற்கு பிறகு மீண்டும் நந்தனில் ஒட்டுமொத்தமாக போட்டு உடைத்திருக்கிறார். இதற்கு முன் பாலாவின் தாரதப்பட்டை படத்தில் இது போல ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், சசிகுமார் அம்பேத்குமார் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவொன்றே போதும் அந்த கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்த. கோப்புலிங்கம் கதாபாத்திரத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் நய்யாண்டி மற்றும் நக்கல் செய்யும் அரசியல் தலைவராக காட்டப்பட்டாலும் அவருக்குள் இருக்கும் சாதி வெறி திமிறி எழும் இடங்களில் மனுஷன் பட்டையை கிளப்பியுள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக ஸ்ருதி பெரியசாமியை நடிக்க வைத்ததும் சிறப்பான சம்பவம் தான். கலரான மலையாள நடிகையை அழைத்து வந்து நடிக்க வைக்காததே தரமான செயல் தான் என பலரும் பாராட்டி வருகின்றனர்,
ஆள்வதற்கு மட்டுமில்லை இங்கே வாழ்வதற்கே அதிகாரம் தேவை தான் என ஷார்ப்பான வசனங்களை இரா. சரவணன் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசை படத்துக்கு பல இடங்களில் பலமாக உள்ளது. முன்னணி நடிகர்களின் நடிப்பு மற்றும் படத்தின் கதை அதில் உள்ள ஆழமும் அழுத்தமும் தான் படத்திற்கு பக்க பலமாக உள்ளன.
மொத்தத்தில் இந்த “நந்தன்” ஒரு அமைதியான புரட்சி
Rating 3/5