
நான் கோழை அல்ல, சட்டப்படி சந்திப்பேன்
விஷம் வைத்து கொன்று விடுங்கள் வீடியோவுக்கு நடிகர் பாலா விளக்கம்
தமிழில் அன்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் பாலா. அடுத்து காதல் கிசு கிசு, கலிங்கா, மஞ்சள் வெயில், அஜித்தின் வீரம், கார்த்தியின் தம்பி, ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இப்போது கேரளாவில் கோட்டயத்தில் வசிக்கிறார். கடந்த 2024-ம் ஆண்டு கோகிலா என்பவரை திருமணம் செய்தார். இந்த விவகாரத்தில் பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா சுரேஷ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனால் பல ஆண்டுகளாக நடிகர் பாலாவின் குடும்பப் பிரச்சினைகள், பரஸ்பர குற்றச்சாட்டுகள் மற்றும் பகிரங்க விவாதங்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டு வருகி்ன்றன
இந்நிலையில் ஒரு பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார் பாலா. அதில் ‘கடந்த 10 ஆண்டுகளாக என்னைச் சித்திரவதை செய்து வருகிறார்கள். சட்டத்தின் பெயரால் ஒரு மனிதனைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்னால் பெயர் சொல்ல முடியாது. அவர்களால் எதை வேண்டுமானாலும் சொல்ல முடியும். நான் ஒரு ஆண், அதனால் என்னால் எதையும் சொல்ல முடியாது. எவ்வளவு சங்கடம் இருந்தாலும் மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும், அப்படித்தானே?
ஊடகங்கள் நல்ல விஷயங்களைச் செய்கின்றன, சில உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன. ஆனால் சில பொய்களையும் சொல்கின்றன. ஊடகங்களை ஏமாற்றும் ஒரு நபர் கேரளாவில் இருக்கிறார். ‘ஒன்றும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்’ என்று கூறிக்கொண்டே திரியும் ஒருவர் அவர். தெரியுமா? நான் திருமணம் செய்துகொண்டேன். இது என் மனைவியின் பிறந்தநாள். ஆனால் வழக்கின் மேல் வழக்கு. நான் என்ன செய்வேன்? இன்று காலை நாங்கள் குடும்பத்துடன் வைக்கம் சிவன் கோயிலுக்குச் சென்றிருந்தோம். நான், என் மனைவி, அவரது தங்கை, என் மாமியார் மற்றும் சித்தப்பா என அனைவரும் வந்திருந்தோம்.
நாளை மனைவி கோகிலாவின் பிறந்தநாள். மகிழ்ச்சி இல்லை, இந்த உலகில் சட்டம் இருக்கிறதா? இனி என்னை யாராவது துன்புறுத்தினால், நான் ஒரு பெரிய செய்தியாளர் சந்திப்பை நடத்துவேன். எல்லா உண்மைகளையும் வெளிப்படையாகப் பேசுவேன். இது நடக்கும், எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உண்மைகளைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். என்னால் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் சொல்கிறேன், மன்னிக்கவும். கடைசியாக ஒன்று, எங்களை விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள் ’ என்று அதில் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில், அந்த வீடியோ குறித்து பாலா கூறுகையில் ‘‘நான் நல்லா இருக்கிறேன். நானும் என் மனைவியும் சந்தோசமாக இருக்கிறோம். சட்டப்படி எங்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நாளை அவருக்கு பிறந்தநாள் வைக்கத்தில் அதை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், பழைய விஷயங்களை மனதில் வைத்து திருப்பி, திருப்பி சிலர் அடிக்கிறார்கள். சட்ட விஷயத்தில் பிரச்னை செய்கிறார்கள். கோர்ட் என்பது நீதி வழங்கும் இடம். அதை சொல்லி பிஸினஸ் நடத்தக்கூடாது என நினைக்கிறேன். நான் நல்லா இருக்கிறேன். நான் லிவர் பேசன்ட். ஆனாலும், நிம்மதியாக சந்தோசமாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக சிலர் என்னிடம் பணம் கேட்கிறார்கள். கோர்ட்டில் வழக்கு இருப்பதால் சில விஷயத்தை வெளிப்படையாக பேச முடியாது. நான் ஆண் என்பதால் சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது. விவரிக்க முடியாது. சிலர் பெண் என்பதால் அதை சொல்கிறார்கள். கோர்ட்டில் நான் அனைத்தையும் ஆதாரங்களுடன் கொடுத்துவிட்டேன். ஆனால், பல இடங்களில் கமிஷன் இருக்கிறது. எல்லாருக்கும் கமிஷன் கொடுக்க வேண்டிய நிலை. மீண்டும் சொல்கிறேன் கோர்ட் என்பது பிஸினஸ் நடத்தும் இல்லை. அது நீதி வழங்கும் இடம். எனக்கு சட்டம், நீதி என்றால் என்னவென புரியவில்லை. நான் சில விஷயத்தில் குழம்பிவிட்டேன். இது தொடர்பாக கேரள முதல்வரை நேரில் சந்தித்து எனக்கு என்ன நடந்தது. அங்கே என்ன நடக்கிறது என்பது குறித்து வெளிப்படையாக சொல்லி, நியாயம் கேட்பேன். திருப்பி, திருப்பி ஒரு விஷயத்தை செய்தால் என்ன செய்வது? அதனால்தான் அப்படிப்பட்ட வீடியோ போட்டேன். எனக்கு உதவுங்கள் என்று சொன்னேன். எனக்கு ஏதாவது புரியாவிட்டால் எனக்கு சொல்லி கொடுங்க. நான் தீவிரவாதி அல்ல. என் தாத்தா பிரபல தயாரிப்பாளர் ஏ.கே.வேலன், என் அப்பா பிரபல இயக்குனர் ஜெயகுமார், அண்ணன் பெரிய இயக்குனர், பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவன். ஒரு விஷயத்தை கேட்கிறேன். 8 ஆண்டுகளுக்குபின் எனக்கு பிரஷர், கேஸ் ஏன்? நாளைக்கு எனக்கு லாட்டரி அடித்தால், நான் கார் வாங்கினால், என் மனைவிக்கு குழந்தை பிறந்தால் கூட வழக்குபோடுவார்களா? என் மனைவிக்கு ஒரு செயின் வாங்கிக்கொடுத்தால் இந்த பிரச்னை. ஆனாலும் சொல்கிறேன், நான் கோழை அல்ல, சட்டப்படி அனைத்தையும் சந்திப்பேன். இப்போது நல்லா இருக்கிறேன்’’‘ என்றார். கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்பு விவகாரத்தான பாலாவின் முன்னாள் மனைவி அம்ரிதாசுரேஷ் மீண்டும் 120கோடி கேட்டு பிரஷர் கொடுப்பதால், வழக்கு தொடர்ந்து இருப்பதால் இப்படி பாலா வீடியோ வெளியிட்டு வேதனைப்பட்டதாக தகவல்