
கண்ணீரா
இயக்கம் – கதிரவன்
நடிகர்கள் – கதிரவன் , ஷாந்தினி , மாயா கிலாமி
இசை – ஹரிமாரன்
தயாரிப்பு – உத்ரா புரொடக்ஷன் – எஸ் ஹாரி உத்ரா
நாயகன் நாயகி இருவரும் நீண்ட நாட்களாக காதல் செய்து வருகின்றனர் , இந்நிலையில் நாயகன் திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக வாழ ஆசைப்படுகிறார். ஆனால் நாயகி, திருமணத்திற்கு முன்பு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர வேண்டும் என்று நினைக்கிறார். அதனால் திருமணம் பேச்சை எடுக்கும் போதெல்லாம் தட்டிக் கழித்து விடுகிறார், மேலும் நாயகி தனது வாழ்க்கை, முன்னேற்றம் பற்றி மட்டுமே யோசிப்பதால் நாயகனுக்கும் அவர் மீதான காதல் குறையத் தொடங்குகிறது. அதே சமயம், தனது அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேரும் மற்றொரு பெண்ணின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்படும் நாயகன், நான் என்று நினைக்காமல் நாம் என்று நினைத்து பழகுவது, குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவற்றால் அந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறார். இதனால் தனது முதல் காதலை முறித்துக் கொண்டு, அந்தப் பெண்ணிடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார். ஆனால், ஏற்கனவே வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்லி நாயகனின் காதலை நிராகரித்து விடுகிறார். இருந்தாலும் நம்பிக்கையோடு அந்தப்பெண்ணின் மீதான காதல் பயணத்தை தொடரும் கதிரவெனின் காதல் ஜெயித்ததா? இந்த ‘கண்ணீரா’ படம்.
இந்தப் படத்தின் இயக்குனர் தான் இதில் நாயகனாக நடித்துள்ளார், இன்றைய கால இளம் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினையை நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் , முதல் படம் என்பதை தாண்டி சிறப்பாக நடித்துள்ளார், குறிப்பாக காதலியிடம் இருந்து விலகி மீண்டும் சேர நினைப்பது போன்ற காட்சிகளில் அருமையாக நடித்துள்ளார்,
நாயகிகளாக நடித்திருக்கும் சாந்தினி கவுர் தனக்கு கொடுக்கப்பட கதாபாத்திரத்தை புரிந்து கொண்டு சரியான நடிப்பை கொடுத்துள்ளார்,
மேலும் மாயா கிளம்மி, அருண் என்ற வேடத்தில் நடித்திருக்கும் நந்தகுமார்.என்.கே.ஆர், என படத்தின் முதன்மை கதாபாத்திரம் மட்டும் இன்றி முக்கிய வேடங்களில் நடித்திருப்பவர்கள் என அனைத்து நடிகர்களும் தமிழ் சினிமாவுக்கு புதியவர்கள் என்றாலும், அவர்களது நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் இருக்கிறது. மலேசிய தமிழர்களான அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு ஹரிமாறன் இசையமைத்துள்ளார், அவரது இசை மற்றும் , கௌசல்யா.என் வரிகளில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை. இந்தப் படத்திற்கு ஏகணேஷ் நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார், தமிழ் சினிமாவில் வழக்கமாக கட்டப்படும் மலேசிய பகுதிகளை தவிர்த்துவிட்டு புதிய லொக்கேஷன்கள் மூலம் பார்வையாளர்களின் கண்களுக்கு மட்டும் இன்றி கதைக்கும் புத்துணர்ச்சியளித்திருக்கிறார்.
படம் முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும் அதை மிக அழகாகவும், ஆழமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் கதிரவென், முதல் பாதியில் பொழுதுபோக்கு அம்சங்களை சரியாக கையாளமல் படத்தை மெதுவாக நகர்த்தி சென்றிருப்பது சற்று பலவீனமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் இரண்டு காதலும் நாயகனை விட்டு விலகுவது மற்றும் காதல் கைகூடும் நேரத்தில் ஏற்படும் திருப்பம் ஆகியவற்றின் மூலம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டி, காட்சிகளில் காதல் ரசத்தை அதிகப்படுத்தி படத்தை ரசிக்க வைத்துவிடுகிறார்.
காதல் என்பது உடல் ரீதியான மோகம் இல்லை, உள்ளம் மூலமாக உணரக்கூடிய உணர்வு, என்ற கருவை மையமாக கொண்டு கெளசல்யா நவரத்தினம் எழுதியிருக்கும் கதைக்கு, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கதிரவென்.
மொத்தத்தில், ‘கண்ணீரா’ காதலர்களை நிச்சயம் மகிழ்விக்கும்.
RATING 3/5