
தினசரி
இயக்குனர் – ஜி ஷங்கர்
நடிகர்கள் – ஶ்ரீகாந்த், சிந்தியா , எம் எஸ் பாஸ்கர், ராதாரவி
இசை – இளையராஜா
தயாரிப்பு – சிந்தியா புரொடக்ஷன் ஹவுஸ் – சிந்தியா
சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பெனியில் நாயகன் பணியாற்றி வருகிறார், போதுமான அளவுக்கு சம்பளம் வாங்கினாலும், வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டும், என்று ஆசைப்படுகிறார். அதற்காக தனக்கு மனைவியாக வரும் பெண் தன்னை விட அதிகம் சம்பாதிப்பவராக இருக்க வேண்டும், என்று நினைக்கிறார். அதற்கு நேர் மாறாக நாயகி அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்கு செல்லாமல், கணவன் மற்றும் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ நினைக்கிறார். எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரது எண்ணங்களும் தெரிய வருகிறது. அதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்பட, அதில் இருந்து மீண்டார்களா? இல்லையா ? என்பதை அறிவுரையாக சொல்லாமல் கமர்ஷியலாக சொல்வதே இந்த தினசரி.
நாயகன் ஶ்ரீகாந்த் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், கை நிறைய சம்பாதித்தாலும், அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற பேராசைப்படும் குடும்பஸ்தனாக நடித்து அனைவர் மனதிலும் நிற்கிறார், தான் நினைத்தது நடக்கவில்லை என்றதும் மனம் வருந்தி தடுமாறும் காட்சிகளில் அழுத்தமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இளமையாக இருப்பவர், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மனமாற்றம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் அதே இளமையோடு இருப்பது ஆச்சர்யம்
நாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்தே, அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர் , பல விமர்சனங்கள் வந்தாலும் அதனை தாண்டி நடித்து வெற்றி கண்டுள்ளார்,
மேலும் ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது ஒரு தனி சிறப்பு , இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் வகையில் இருப்பதோடு. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் பணி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
நல்ல விசயத்தை நல்லபடியாக சொல்லி, குடும்பத்துடன் பார்க்கும் படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஜி.சங்கர், தற்போதைய தலைமுறையினருக்கு வாழ்க்கையின் புரிதலையும், குடும்ப உறவுகளின் உண்ணதத்தையும் புரிய வைத்திருக்கிறார். மொத்தத்தில் இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது, என்ற பழமொழிக்கேற்ப தற்போதைய தலைமுறையினர் முன்னேற்றம் என்ற பெயரில் பணத்தின் பின்னாடி பயணித்து, வாழ்க்கையை இழந்துவிடுகிறார்கள், என்ற மெசஜை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.
மொத்தத்தில், ‘தினசரி’ கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் தினசரி போராட்டத்திற்கு ஒரு அறிவுரை.
Rating 3/5