எங்கள் தங்கம்’படம் எப்படி இருக்கு?

‘எங்கள் தங்கம்’ விமர்சனம்

குடும்ப பாசம், அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘எங்கள் தங்கம்’.

திருமணத்திற்குப் பிறகு கணவர் குடும்பத்தின் அன்பைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களுடன் இணைந்து வாழ முயற்சிக்கும் இளம்பெண்ணாக சமந்தா அறிமுகமாகிறார். அனைவரின் மனதையும் கவர அவர் செய்யும் சிறு சிறு முயற்சிகள் ரசிக்க வைக்கின்றன. ஆனால் எதிர்பாராத விதமாக அவரது வாழ்க்கைக்குள் நுழையும் ஆபத்து, கதையை முற்றிலும் வேறு திசைக்கு நகர்த்துகிறது.

சிறையில் இருந்து தப்பிய ஒரு கொடூர குற்றவாளி சமந்தாவை தேடி வருவதும், அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் திரைக்கதையை விறுவிறுப்பாக மாற்றுகின்றன. குடும்பத்தை பாதுகாக்க போராடும் சமந்தாவின் பயணம், சுவாரஸ்யமான திருப்பங்களுடன் நகர்கிறது.

இந்தப் படத்தின் இதயமாக திகழ்வது சமந்தாவின் நடிப்புதான். குடும்பப் பெண்ணாக மென்மையாக தோன்றும் அவர், தேவையான நேரத்தில் மாஸ் ஆக்‌ஷன் நாயகியாக மாறி திரையை முழுமையாக ஆள்கிறார். சண்டைக் காட்சிகள், துப்பாக்கி சூடு காட்சிகள் மற்றும் உணர்ச்சி மிகுந்த தருணங்கள் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

திகந்த் மஞ்சாலே, கெளதமி, ஆனந்த், ஸ்ரீ லக்ஷ்மி, மன்ஜூஷா, சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் கதைக்கு தேவையான வலுவான பங்களிப்பை வழங்கியுள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்கிடையேயான உறவுகளும், அவர்களின் இயல்பான நடிப்பும் படத்துடன் ரசிகர்களை எளிதில் இணைக்கின்றன.

குல்ஷன் தேவய்யா வில்லனாக கதைக்கு தேவையான பரபரப்பை உருவாக்குகிறார். அவரது வருகையால் கதையில் ஏற்படும் மாற்றங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், கிராமத்து சூழலையும், அதிரடி காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். குறிப்பாக சமந்தாவின் மாஸ் தருணங்களை திரையரங்கில் கைதட்ட வைக்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் மனதை கவர, பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி, குடும்ப கதைக்குள் ஆக்‌ஷன் அம்சங்களை அழகாக கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளார். முதல் பாதி நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளால் ஈர்க்க, இரண்டாம் பாதி அதிரடி விருந்தாக மாறுகிறது.

மொத்தத்தில், ‘எங்கள் தங்கம்’ குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர். சமந்தாவின் மாஸ் நடிப்பும், விறுவிறுப்பான திரைக்கதையும் படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.

ரேட்டிங் : 3.8 / 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *