“ஹாய்” திரைப்பட விமர்சனம்

“ஹாய்” திரைப்பட விமர்சனம்

காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற கனவுடன் வாழும் கவின், தனக்கு ஏற்ற காதல் துணை கிடைக்காததால் பெற்றோரின் திருமண முயற்சிக்கு எதிராக வீட்டை விட்டு வெளியேறுகிறார். மறுபுறம், திருமணம் தன் சுதந்திரத்துக்கு தடையாகிவிடும் என்று நினைக்கும் நயன்தாராவும், எதிர்பாராத திருமண ஏற்பாட்டிலிருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். இருவரும் சென்னையில் சந்திக்கும் தருணமே கதையின் முக்கியப் பயணத்திற்கு தொடக்கமாகிறது.

முதலில் நட்பாக பழகும் இருவருக்குள், கவினின் மனதில் மட்டும் காதல் மலர்கிறது. ஆனால், திருமணம் மற்றும் காதல் மீது நம்பிக்கை இல்லாத நயன்தாரா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இதனால் தனது காதலை வெளிப்படுத்தாமல் மனதுக்குள் வைத்துக்கொள்ளும் கவின், எதிர்பாராத சூழலில் நயன்தாராவுடன் கணவன் – மனைவியாக நடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது காதலை நயன்தாராவிடம் கொண்டு சேர்க்க அவர் முயற்சிப்பதே படத்தின் மையக்கதை.

கதையில் மிகப்பெரிய திருப்பங்களோ, பரபரப்பான சம்பவங்களோ இல்லாவிட்டாலும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அவர்களுக்கிடையேயான உறவையும் முன்னிலைப்படுத்தி படம் பயணிக்கிறது. இதனால் ‘ஹை’ ஒரு பெரிய சினிமா அனுபவத்தை எதிர்பார்க்காமல், கதாபாத்திரங்களுடன் பயணிக்க விரும்பும் ரசிகர்களுக்கு இதமான காதல் படமாக அமைந்திருக்கிறது.

கோவை இளைஞராக கொங்கு தமிழ் பேசி நடித்திருக்கும் கவின், படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். காதலுக்காக ஏங்கும் தருணங்களிலும், ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் காட்சிகளிலும் அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. குறிப்பாக, காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும் இடங்களில் அவரது முகபாவனைகள் கதாபாத்திரத்தின் மனநிலையை அழகாக பிரதிபலிக்கின்றன. காமெடியையும் மிகைப்படுத்தாமல் கையாண்டிருப்பது கூடுதல் பலம்.

நயன்தாரா தனது வழக்கமான திரை வசீகரத்துடன் கதாபாத்திரத்தை கையாள்கிறார். சுயமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்ணாகவும், திருமணத்தை ஏற்க மறுக்கும் மனநிலையுடனும் அவரது நடிப்பு பொருத்தமாக இருக்கிறது. அவரது திரை இருப்பும், முதிர்ச்சியான நடிப்பும் பல காட்சிகளுக்கு அழகு சேர்க்கிறது. அதே நேரத்தில், சில காட்சிகளில் அவரது வயது முதிர்ச்சி கதாபாத்திரத்துடன் முழுமையாக இயைந்து செல்லாத உணர்வு ஏற்படுகிறது.

ராதிகா, கே.பாக்யராஜ், பிரபு மற்றும் சிறப்பு தோற்றத்தில் வரும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரின் அனுபவம் படத்திற்கு கூடுதல் வலு. அவர்களுக்கு வழங்கப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தாலும், ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

சத்யன், ஆதித்யா கதிர் மற்றும் குரேஷி ஆகியோர் வரும் காட்சிகள் படத்தின் நகைச்சுவை பகுதிக்கு நல்ல உயிரூட்டுகின்றன. குறிப்பாக சத்யனின் மைண்ட் வாய்ஸ் காட்சிகள் திரையரங்கில் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன. விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் உள்ளிட்டோரின் பங்களிப்பும் திரைக்கதைக்கு தேவையான இடங்களில் கை கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தை அழகான வண்ணங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவும், குறிப்பாக நயன்தாராவின் திரை தோற்றமும் கவனம் ஈர்க்கிறது.

ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன. பின்னணி இசை காதல் காட்சிகளின் உணர்வுகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு படத்தின் மென்மையான ஓட்டத்திற்கு பொருத்தமாக இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், மிக எளிமையான காதல் கதையை எந்தவிதமான தேவையற்ற சிக்கல்களும் இல்லாமல் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆரம்பம் முதல் இறுதி வரை கதை எங்கு செல்கிறது என்பதை ரசிகர்கள் எளிதாக கணிக்க முடிந்தாலும், கதாபாத்திரங்களின் ரசிக்க வைக்கும் தருணங்களும், நகைச்சுவையும் படத்தை சுவாரஸ்யமாக வைத்திருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய குறை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு வலுவான திருப்பங்கள் இல்லாதது. மேலும், கவின் மற்றும் நயன்தாரா இடையேயான காதல் உறவு சில இடங்களில் இயல்பாக இருந்தாலும், சில காட்சிகளில் வயது வித்தியாசம் கண்களில் படுகிறது. இருப்பினும், கவினின் கட்டுப்படுத்தப்பட்ட நடிப்பு அந்த இடைவெளியை பெரும்பாலும் சமாளித்துவிடுகிறது.

மொத்தத்தில், ‘ஹாய்’ பெரிய திருப்பங்களோ, அதிரடி சம்பவங்களோ இல்லாமல் காதல், நட்பு, நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை கலந்து சொல்லும் ஒரு இலகுவான திரைப்படம். எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டு சென்றால், ‘ஹை’ நிச்சயம் ரசிக்க வைக்கும்.

ரேட்டிங்: ⭐ 3.75/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *