மாமன் படம் எப்படி இருக்கு?

மாமன்

இயக்குனர் – பிரசாந்த் பாண்டியராஜ்
நடிகர்கள் – சூரி , ஐஷ்வர்யா லக்ஷ்மி , ராஜ்கிரன் , ஸ்வாஷிகா
இசை – ஹெஷம் அப்துல் வஹாப்
தயாரிப்பு – லார்க் ஸ்டுடியோ – கே குமார்

நாயகன் தனது அக்கா மீது அன்பாக இருக்கிறார். திருமணமாகி 10 வருடங்களுக்குப் பிறகு அவரது அக்காவுக்கு குழந்தை பிறக்கிறது. தனது அக்கா மீது காட்டும் அன்பவை விட அக்கா மகன் மீது அதிகம் அன்பு காட்டுகிறார். அக்கா மகனும் பெற்றோரை விட மாமா மீது தான் அன்பாக இருக்கிறார். நாயகியை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நாயகன் இல்லற வாழ்வில், அக்கா மகனால் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதை கண் கலங்கும்படி சொல்வதே ‘மாமன்’.

எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற நாயகனாக தன்னால் உருவெடுக்க முடியும், என்பதை தனது நடிப்பு மூலம் மீண்டும் ஒருமுறை சூரி நிரூபித்திருக்கிறார். அழுத்தமான கதாபாத்திரம், ஆக்‌ஷன் ஹீரோ என்று தனது ஆரம்பக்கட்ட படங்களில் அடையாளப்படுத்திக் கொண்ட சூரி, இதில் கமர்ஷியல் நாயகனாக கலகலப்பாக வலம் வருவதோடு, செண்டிமெண்ட் காட்சிகளில் அழுத்தமான நடிப்பின் மூலம் இதயத்தை கனக்க வைக்கிறார். அக்கா மற்றும் குடும்பம் மீது காட்டும் அன்பும், அக்கறையும் போல் மனைவியிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து கலங்கும் காட்சியில் தாய்மார்களை கண் கலங்க வைக்கும் சூரிக்கு, இனி பெண்கள் ரசிகர் வட்டம் அதிகரிப்பது உறுதி.

சூரியின் மனைவியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி, மனைவிகளின் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் தனது நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குடும்பம் மீது அக்கறை காட்டும் ஆண்கள், மனைவி மீது காட்டவில்லை என்ற பெரும்பாலான பெண்களின் கோபத்தை தனது ஆக்ரோஷமான நடிப்பு மூலம் வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.

மனைவியின் பெருமை பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜ்கிரணின் கதாபாத்திரமும், அவரது திரை இருப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ‘லப்பர் பந்து’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறார் சுவாஷிகா. சூரியின் அக்காவாக நடித்திருக்கும் அவர் கண்கள் மூலமாகவே பல உணர்வுகளை வெளிப்படுத்தி அசத்துகிறார். பாபா பாஸ்கர், சிறுவன் பிரகீத் சிவன், பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், சாயா தேவி, நிகிலா சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசை அதிகம் சத்தம் இல்லாமல் அளவாக பயணித்திருப்பது அருமை, ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

நாயகன் சூரியின் கதையில் குடும்ப உறவுகளின் மேன்மை மற்றும் முக்கியத்துவம் வழிந்தோடுகிறது. திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் பாண்டியராஜ், குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் சிறு சிறு பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லி, குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருக்கிறார். திருமண நிகழ்ச்சி, காது குத்து, சீமந்தம் என்று படம் முழுவதும் குடும்ப நிகழ்ச்சி அதிகம் இருப்பதால், ஏதோ சீரியல் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், பெண் பெருமையை தூக்கலாக பேசியிருப்பதால் படம் நிச்சயம் தாய்மார்களை கவரும்.

மொத்தத்தில், ‘மாமன்’ தாய்மார்களின் பாசப்பிணைப்பு.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *