வேம்பு படம் எப்படி இருக்கு?

வேம்பு
இயக்குனர் – ஜஸ்டின் பிரபு
நடிகர்கள் – ஹரி கிருஸ்னன் , ஷீலா , மாரிமுத்து
இசை – மணிகண்டன் முரளி
தயாரிப்பு – கோல்டன் ஸ்யூர்ஸ் – மஞ்சள் சினிமாஸ்

தன் இலட்சியத்தை அடைகிற வரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக இருக்கும் நாயகனுக்கு சந்தர்ப்ப சூழல் காரணமாக கல்யாணம் நடந்துவிடும். அதனால் நினைத்ததை சாதிக்க எவ்வாறெல்லாம் போராடுகிறார் என்று நாயகனை மையப்படுத்திச் சொல்லக் கூடிய கதையை அப்படியே தலை கீழாகத் திருப்பிப் போட்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் வேம்பு.

வேம்புவாக நடித்திருக்கும் ஷீலா, தற்காப்புக் கலையில் சாதிக்க நினைக்கிறார். அவருக்கு எதிர்பாரா விதமாக திருமணம் நடக்கிறது.மனைவியின் எண்ணத்துக்குத் துணைநிற்க எண்ணும் கணவன் அமைந்தும் எதிர்பாரா நேர்ச்சியால் வாழ்க்கை வேறுவிதமாகி விடுகிறது. அது என்ன? அதன் விளைவுகள் என்னென்ன? அவற்றை நாயகி எப்படி எதிர்கொள்கிறார்? என்பனதாம் படம்.

நாயகி ஷீலா,ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு நூறு விழுக்காடு நியாயமாக இருக்கிறார்.சிலம்பம் சுற்றும் அழகும் கணவன் கையறு நிலைக்கு ஆளாகும்போதும் வாழ்க்கையை எதிர்கொள்ளும் துணிவும் அவர் நடிப்பால் சிறப்புப் பெறுகின்றன. நாயகனாக நடித்திருக்கும் ஹரிகிருஷ்ணன், சவாலான பாத்திரத்தை ஏற்று அதை நிறைவாகச் செய்திருக்கிறார.மாரிமுத்து, கர்ணன், ஜானகி மற்றும் அந்த சிறுவன் உள்ளிட்டோரும் குறைவின்றி நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார்கள்.

மணிகண்டன் முரளி இசையில் பாடல்கள் இரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் இரைச்சல் இல்லாமல் அளவாக அமைந்திருக்கிறது.
,ஏ.குமரன் ஒளிப்பதிவில் கிராமத்துக் குளுமைகளும் கதைமாந்தர்களின் முக அக அழகுகளும் கண்களில் நிறைகின்றன.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜஸ்டின் பிரபு. திரையில் எதிர்மறையாகவே பார்த்துப் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் கணவன், அரசியல்வாதி போன்ற எல்லாக் கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்மறையாகப் படைத்திருப்பது வரவேற்கத் தக்க விசயம். எளிய கதை மாந்தர்களை வைத்துக் கொண்டு வலிமையான கருத்துகளை பரப்புரை தொனியின்றி சொல்லியிருந்தாலும் திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கும் தொய்வுகள் பலவீனம். தற்காப்புக் கலைகளின் சிறப்புகள் மற்றும் தேவைகள், பெண்கள் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்க வேண்டும் என்கிற தன்னம்பிக்கை ஆகியனவற்றை முறையாகச் சொல்லி நினைத்து நினைத்து வியக்க வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த வேம்பு கேர்யருக்கும் ஏழ்மைக்கும் இடையே நடக்கும் போராட்டம்.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *