ராஜபுத்திரன் படம் எப்படி இருக்கு?

ராஜபுத்திரன்

இயக்குனர்: மகா கந்தன்

நடிகர்கள்: பிரபு ,வெற்றி, கிருஷ்ணபிரியா, மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், கோமல் குமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை

இசை: எஐஎஸ் . நௌஃபல் ராஜா

தயாரிப்பு நிறுவனம்: கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்

தயாரிப்பாளர் : K.M சபி – கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ்

ராமநாதபுரத்தில் தனது மகன் வெற்றி மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு தந்தை, மகனும் அப்பா மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். மகன் எந்த ஊருக்கும் வேலைக்குச் செல்லக் கூடாது என்றெண்ணும் தந்தை, தனது மகனை தன்னுடனே வைத்து வளர்த்து வருகிறார். வானம் பொய்த்து போக, விவசாயம் இல்லாமல், வட்டிக்கு பணத்தைக் கடன் வாங்கும் நிலைக்குச் செல்கிறார் தந்தை. அப்பாவின் கஷ்டத்தை எண்ணி வருந்தும் வெற்றி, அவருக்கு தெரியாமல் வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். அதற்காக ஒருவரை சந்திக்கிறார். வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தை வரி ஏதும் செலுத்தாமல், அதனை முறையற்ற முறையில் கொண்டு சேர்க்கும் பினாமியாக அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். முறையற்ற முறையில் வரும் பணத்தை அவர் மூலமாக நேரடியாக கொண்டு செல்லும் வேலையை பார்க்க ஆரம்பிக்கிறார் நாயகன். இந்த சமயத்தில் ஒரு பெண்ணை சந்திக்கிறார் . கண்டதும் அவர் மீது காதல் கொள்ள, ஒருதலை காதலானது இருதலை காதலாக மாறுகிறது. இந்நிலையில், அவன் கொண்டு சென்ற பணமானது சில கயவர்களால் திருடப்பட, பணம் கொடுத்தவரிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார் . தனது வீட்டு பத்திரத்தை வைத்து தனது மகனை மீட்டு வருகிறார் தந்தை. அதன்பிறகு அவனது வாழ்க்கையில் என்ன நடந்தது.? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் வெற்றி தனது பணியை மிகவும் அழகாக செய்து முடித்திருக்கிறார். இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக இப்படத்தில் தனது கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார் வெற்றி. கிருஷ்ண பிரியாவுடனான காதல், பிரபுவுடனான பாசம், வில்லனுடனான ஆக்‌ஷன் என எல்லா கோணங்களிலும் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

தமிழுக்கு இது அறிமுகம் என்றாலும், பல படங்கள் நடித்த அனுபவம் போன்று தனது மண்வாசனை நடிப்பை மிகவும் அழகாக கொடுத்திருக்கிறார் நாயகி கிருஷ்ண பிரியா.

இக்கதையின் மிகவும் முக்கியமான பில்லராக வந்து நிற்கிறார் பிரபு. இந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் சரியான பொருத்தம் என்று கூறும் அளவிற்கு பிரபு தனது கேரக்டரில் ஓங்கியே நிற்கிறார். அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார் செல்லையா (பிரபு). மேலும் வில்லனாக நடித்த கோமல் குமார், க்ளைமாக்ஸ் தவிர மற்ற இடங்களில் பில்-டப் மட்டுமே செய்துள்ளார். ஆங்காங்கேயும் ஒரு சில காட்சிகளில் நடிப்பின் திறமையை வெளிப்படுத்தியிருந்திருக்கலாம்.

இசை இந்தப்படத்திற்கு பெரிதும் உதவியாக இருந்தது, வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் அருமை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தினை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. ஒளிப்பதிவும் மிகப்பெரும் பங்காற்றிருக்கிறது. குட்டி சுவர், மொட்ட வெயில், முள்ளு காடு என காட்சிகளை காட்டிய விதம் அழகு.

இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார் இயக்குனர் மகா கந்தன் , இராமநாதாபுர மாவட்ட ஒரு வாழ்வியலை பார்த்த ஒரு திருப்தியை இயக்குனர் கொடுத்திருக்கிறார். தந்தை மகனுக்காக செய்யும் விஷயம், தந்தையின் பாசத்திற்கு ஈடு செய்யும் மகன் என படம் முழுக்க ஒரே பாசப்பிணைப்புதான், அதே நேரத்தில் இராமநாதாபுர மக்களின் வாழ்வில் நடக்கும் சங்கடங்களையும் அழகாக எடுத்துரைத்துள்ளார்,

மொத்ததில் இந்த “ராஜபுத்திரன்” தந்தை மகன் பாசம்.

Rating 3/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *